என்டிஏ-வில் தினகரன்... அடையாளத்தை தொலைக்கிறதா அமமுக?

என்டிஏ-வில் தினகரன்... அடையாளத்தை தொலைக்கிறதா அமமுக?
Updated on
2 min read

இவரும் கூட்டணிக்குள் வந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த டிடிவி.தினகரனை எப்படியோ பேசி மடக்கி என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டது பாஜக. இதன் மூலம் பாஜக தான் நினைத்ததை சாதித்துவிட்டாலும், சொந்தக் கட்சிக்குள் தனக்கான இருப்பைத் தொலைத்திருக்கிறார் தினகரன் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

கடந்த 2021 தேர்தலில் 21 தொகுதிகளில் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை தட்டிவிட்டது அமமுக. அதிலும் குறிப்பாக, முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகம் உள்ள டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்கு பெரும் சவாலாக இருந்தது அமமுக. ஓபிஎஸ், டிடிவி, சசிகலா உள்ளிட்டவர்களை ஓரங்கட்டிய பழனிசாமி, தான் சார்ந்த கவுண்டர் சமூகத்துக்கு கட்சிக்குள் முக்கியத்துவம் அளித்து அதிமுக-வை கவுண்டர் கட்சியாக மாற்றிவிட்டார் என்று செய்யப்பட்ட பிரச்சாரமே இதற்கு முழுமுதற் காரணம் என்ற கருத்து நிலவியது.

இந்தப் பின்னணியில், தேவர் சமூகத்தினரிடம் கணிசமான ஆதரவை பெற்றுள்ள தினகரன், முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்றுக் கொண்டு அதிமுக – பாஜக கூட்டணியில் சேர்ந்திருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக-வினர் சிலர், எதிர்ப்பு அரசியல் நடத்தியே பழகிவிட்ட அமமுக-வினரும் அதிமுக-வினரும் தேர்தலில் ஒருவரின் வெற்றிக்கு இன்னொருவர் எப்படி ஒருங்கிணைந்து பணி செய்வார்கள்? தேர்தலுக்குப் பிறகு ஒரு வேளை கூட்டணி ஆட்சி அமைந்தால் தினகரனுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகுபார்க்க சம்மதிப்பாரா பழனிசாமி?

மேலும் கடந்த தேர்தலில் அமமுக 2.3 சதவீத வாக்குகளைப் பெற்றதற்கு அந்தக் கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ கட்சியும் ஒரு முக்கியக் காரணம். இப்போது, பாஜக கூட்டணியில் தினகரன் அங்கமாகி இருப்பதால் கடந்த தேர்தலில் அவருக்கு சாதகமாக இருந்த சிறுபான்மையினர் ஓட்டுகள் இம்முறை குக்கருக்குள் சிக்காது.

அதேநேரம், அதிமுக கூட்டணியில் சேர்ந்திருப்பதால் அமமுக-வுக்கு இந்தத் தேர்தலில் வாக்கு வங்கி உயரலாம். தினகரன் கூட சட்டசபைக்குப் போகலாம். ஆனால், தேர்தலுக்குப் பிறகு அமமுக தனது சுயபலத்தை இழந்துவிடும். ஒரு காலத்தில் தினகரனுக்கு பின்னால் கைகட்டி நின்ற தங்கத் தமிழ்ச்செல்வனையும் செந்தில்பாலாஜியையும் திமுக இப்போது உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இதையெல்லாம் புரிந்து கொண்டு, தினகரன் திமுகவுடன் கூட்டு வைத்து அதிமுகவை வீழ்த்தி இருக்கலாம்” என்றனர்.

அதேநேரத்தில் தினகரனின் தீவிர விசுவாசிகளான அமமுகவினர் கூறுகையில், ‘‘தினகரன் சட்டசபைக்கு செல்வதும் அமமுகவின் வாக்கு வங்கி உயர்வதும் கட்சிக்கு செல்வாக்கை ஏற்படுத்தும். எஸ்டிபிஐ கட்சி கூட்டணியில் இருந்ததால் கடந்த தேர்தலில் தினகரனுக்கு கிடைத்த குறிப்பிட்ட அளவு வாக்குகள் தற்போது கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், தற்போது அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் அதற்கு மேலாகவே அமமுகவுக்கு கிடைத்து விடும். தங்க தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி நிலைமைவேறு.

அவர்கள் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக அதிகார வட்டத்துக்குள் இல்லை. அவர்களுக்கு என்று தனியாக சமூகம் சார்ந்த வாக்கு வங்கியும் சொந்த செல்வாக்கும் இல்லை. ஆனால், தினகரன் அப்படி அல்ல. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்தவர். ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்து அதிமுகவில் அதிகாரப் புள்ளியாக இருந்தவர். சமூகம் சார்ந்தும் அவருக்கு என கணிசமான வாக்குகள் உள்ளது. தனியாக, கட்சியும் நடத்தி வருகிறார்.

இந்தப் பின்னணியில் அவர் போய், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காலமெல்லாம் எதிர்த்து வந்த திமுக அணியில் இணைவது அவருக்கு துரோகி பட்டத்துடன் பின்னடைவையே ஏற்படுத்தும். திமுகவின் பி டீம் ஆகவே தினகரன் செயல்பட்டு வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்களை பலப்படுத்தும். எனவே, அதிமுக கூட்டணியில் இணைந்திருப்பதன் மூலம் அவர் சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறார். அதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்’’ என்று தெரிவித்தனர்.

தினகரன் எடுத்துள்ள முடிவு சரியா, தவறா, என்பதை அறிய ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான மக்களின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.

என்டிஏ-வில் தினகரன்... அடையாளத்தை தொலைக்கிறதா அமமுக?
“மக்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம்” - தவெக அருண்ராஜ் சொல்கிறார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in