மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு ஏப்.8-ம் தேதிவரை இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், நீதிமன்ற அவமதிப்பு மனுக்களில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும் அரசுத் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீப நாளில் தீபத்தூணில் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும் என ஜன.6-ம் தேதி உத்தரவிட்டது. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிரான மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் இருந்தன.
இதனால் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை தனி நீதிபதி தொடர்ந்து விசாரணை நடத்தி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். இந்த மனு கடந்த மார்ச் 4-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் கொண்ட குழு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் வழிபாடு நடத்த அனுமதிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும்.
மேலும் இதுதொடர்பாக மார்ச் 18-ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன் ஆகியோர் தகுந்த பதில் அளிக்க வேண்டும். தவறினால் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என உத்தரவிட்டு அடுத்தகட்ட விசாரணையை தள்ளிவைத்திருந்தார்.
இந்த வழக்கு தனி நீதிபதி முன்பு இன்று (மார்ச் 18) விசாரணைக்கு வரவுள்ள நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது அரசுத் தரப்பில், நீதிமன்றம் பரிந்துரைக்கும் 5 பேரை தீபத்தூண் அருகே பூஜை செய்ய அனுமதிப்பது தொடர்பாக தெரிவிக்கக் கூறப்பட்டுள்ளது. இந்த அவமதிப்பு வழக்கில் புதிய நபர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. இதற்கு எதிராகவும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதையும் விசாரிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
அப்போது நீதிபதிகள், அதை அனுமதிப்பதில் என்ன சிக்கல் இருக்கப் போகிறது, 5 நபர்களை பூஜை செய்ய அனுப்புவது பிரச்சினையாக இருந்தால் கோயில் சார்பில் பூஜை செய்யலாமே, இது சிறிய விஷயம்தானே. இதை செய்து மற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாமே என்றனர்.
அதற்கு அரசு தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதிகாரத்தை மீறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் உத்தரவுவிவரங்களை அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. விசாரணை ஏப்.8-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.