

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை தமிழகத்துடன் இணைத்து நடத்தக்கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளர்சிவா அனுப்பிய கடிதம்: வரலாற்று ரீதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்தல்கள் பெரும்பாலும் ஒரே நாளில் நடத்தப் பட்டு வந்துள்ளன.
இந்த அணுகுமுறையிலிருந்து விலகுவதற்கான காரணங்களை கூற வேண்டும். தற்போதைய புதுச்சேரி சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் ஜூன் 15 வரை நீடிக்கும். இப்படியிருக்க, தேர்தல் அட்டவணையை முன்கூட்டியே நடத்துவதில் உள்ள அவசரம் குறித்து தெரிவிக்க வேண்டும்.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில், 28 தொகுதிகள் புவியியல் ரீதியாகத் தமிழ்நாட்டுக்குள் அமைந்துள்ளன. இத்தகைய சூழ்நிலைகளில், இரண்டு வெவ்வேறு தேதிகளில் வாக்குப்பதிவை நடத்துவது, பிரச்சாரம் என்ற போர்வையில் வெளியாட்கள் நடமாடுவது, வாக்காளர் ஆள்மாறாட்ட அபாயங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்ட சவால்களை உருவாக்கக்கூடும்.
புதுச்சேரிக்கு தமிழ்நாட்டின் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ல் இணைத்து நடத்த வேண்டும். தமிழகத்தில் வேலை நாளாக வரும் ஏப்.9-ம் தேதி புதுச்சேரி வாக்குப்பதிவை நடத்தினால், இங்கிருந்து தமிழகத்தில் பணி புரிவோருக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை உறுதி செய்ய வேண்டும்.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்யப் போதுமான கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் வேட்பு மனு செயல்முறைக்கு நியாயமான காலஅட்டவணையை தரவேண்டும்.