

சென்னை: தமிழக விளையாட்டு பயிற்சியாளர்களுக்கான உயர் செயல்திறன் பயிற்சி முகாமை, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.
ஒலிம்பிக் போட்டிகளில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, முதல்கட்டமாக தடகளம் மற்றும் ஜூடோ பயிற்சியாளர்களுக்கான 2 நாள் உயர் செயல்திறன் பயிற்சி முகாம் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
முகாமில், தடகள விளையாட்டு பிரிவுக்கு நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ட்ராய் ஹாமில்டன் டக்ளஸுடன் ஜே.எஸ்.டபிள்யூ பயிற்சியாளர்களும், ஜூடோபிரிவுக்கு துரோணாச்சார்யா விருது பெற்ற ஜீவன் குமார் சர்மாவும் எஸ்டிஏடி மற்றும் விளையாட்டு சங்கங்களின் பயிற்சியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கின்றனர்.
பயிற்சி முகாமை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழக வீரர்கள் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் அதிக பதக்கங்களை வெல்லும் வகையில், சென்னையில் உலகத் தரம் வாய்ந்த ‘தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்’ அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
அதற்கான சூழலை உருவாக்கும் விதமாக தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ஆண், பெண் இருபாலருக்குமான விளையாட்டு விடுதிகளை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அண்மையில் 100-க்கும் மேற்பட்ட பயிற்றுநர்கள் புதிதாக நியமிக்கப்பட்டதோடு, வீரர்களின் ஊட்டச்சத்து உணவுக்காக ரூ.44.39 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எஸ்டிஏடி விளையாட்டு விடுதிகளில் 2,600 வீரர், வீராங்கனைகள் தங்கி பயிற்சி பெற்றுவருகின்றனர். கடந்த காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற 7 தமிழக வீரர்களில் 6 பேர் இந்த விடுதிகளைச் சேர்ந்தவர்கள்.
வீரர்கள் வானமே எல்லையாகக் கொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றால், அவர்களுக்கு உயர்தர மேம்பட்ட பயிற்சி மற்றும் அறிவியல் சார்ந்த பயிற்சியாளர்கள் தேவை.
அதனாலேயே இந்த முன்னெடுப்பு பயிற்சியாளர்களிடம் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள் இந்த முகாமை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என வலியுறுத்தினார்.
நிகழ்வில் இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட் தலைவர் மனிஷா மல்ஹோத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன், பொது மேலாளர் எல்.சுஜாதா, தடகள சங்கத்தின் செயல் தலைவர் லதா மற்றும் ஜூடோ சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.