வானிலை முன்னறிவிப்பு: கோவை, நீலகிரிக்கு கனமழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: கோவை, நீலகிரிக்கு கனமழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை (ஜூன் 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட தமிழக கடலோரப் பகுதியில் இருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை சுமார் 0.9 கி.மீ. உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நாளை (ஜூன் 30) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 1, 2 தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

3-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் வெண்ணாவல்குடியில் 7 செமீ, கோவை மாவட்டம் சோலையாரில் 6 செமீ, தஞ்சாவூர், கோவை மாவட்டம் உபாசியில் தலா 5 செமீ, கோவை மாவட்டம் சின்கோனா, நீலகிரி மாவட்டம் கோடநாடு, விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி, விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளத்தில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: கோவை, நீலகிரிக்கு கனமழை வாய்ப்பு
“தவெகவின் வாஷிங் மெஷின் அரசியல்...” - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in