அத்திவரதர் ஆனந்த சரஸ் குளத்தை திறக்க கோரிய வழக்கு: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

அத்திவரதர் ஆனந்த சரஸ் குளத்தை திறக்க கோரிய வழக்கு: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, அத்திவரதர் ஆனந்த சரஸ் குளத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவெடுக்கும்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அமைந்துள்ள ஆனந்தசரஸ் குளத்தினுள் உள்ள மண்டபத்தில் அனந்த சயன கோலத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுக்கப்பட்டு, கோயில் வசந்த மண்டபத்தில் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் மீண்டும் ஆனந்த சரஸ் குளத்தின் மண்டபத்தினுள் சயனக் கோலத்தில் வைக்கப்படுவார். பின்னர் அந்த குளத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த நிலையில், சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தத்தா தேசிக திருவம்சத்தார் சபை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “நாளை ( ஆகஸ்ட் 27ம் ) ஆவணி அவிட்டம் முதல் தொடங்கும் சடங்குகளின் ஒரு பகுதியாகப் புனித நீராடுதல் உள்ளிட்ட சடங்குகளை செய்வதற்காக தங்கள் சபையினரையும், வேதபராயணகாரர்களையும், ஸ்தலத்தார்களையும் அவரவர் சடங்குகளை நிகழ்த்துவதற்காக, அனைத்து புனித நாட்களில் அனந்தசரஸ் குளத்தைத் திறந்து வைக்குமாறு தேவராஜ சுவாமி கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், ”முக்கிய நாட்களில் குளத்தை திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை பொருட்படுத்தாமல், குளத்தை மூடிவிட்டதாகவும், அடிப்படை மத உரிமைகள் தடுக்கப்படுவதாகவும்” குற்றம்சாட்டப்பட்டது.

கோயில் நிர்வாகம் தரப்பில், “புனித நீராடுவதற்காக ஏராளமான மக்கள் கூட வாய்ப்புள்ளதால், அனந்தசரஸ் குளத்தை திறக்க இயலாது” என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, புனித நாட்களில் ஆனந்த சரஸ் குளத்தை திறக்கலம் என கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின சுட்டிக்காட்டி, குளத்தை திறக்கக்கோரி மனுதாரர் சபை அளித்த கோரிக்கை மனுக்களைப் பரிசீலித்து, தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்திவரதர் ஆனந்த சரஸ் குளத்தை திறக்க கோரிய வழக்கு: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
கைவிலங்குடன் பிரைடன் கார்ஸ்; தொடரும் மதுபோதை, நைட் கிளப் சம்பவங்கள்! - கடும் கோபத்தில் ஜோ ரூட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in