

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஜோ ரூட்டின் சிறப்பான தொடக்கம், அணியின் மற்றொரு ஆஃப்-தி-ஃபீல்டு சர்ச்சையால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ், சனிக்கிழமை டெர்பியில் உள்ள இரவு விடுதி ஒன்றிலிருந்து கைவிலங்குடன் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தோன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, கிரிக்கெட் ஒழுங்குமுறை அமைப்பின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களின்போதும் இங்கிலாந்து வீரர்கள் தொடர்பாக மது அருந்துதல் மற்றும் இரவு விடுதி சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. ஒயிட்-பால் கேப்டன் ஹாரி புரூக் வெலிங்டனில் இரவு விடுதி பாதுகாவலருடன் மோதலில் ஈடுபட்டதாகவும், ஆஷஸ் தொடரின்போது பென் டக்கெட் போதையில் இருந்ததாகத் தோன்றும் காட்சிகள் வெளியாகின. ஆஷஸ் தொடரை இங்கிலாந்து 1-4 என இழந்தது.
கடந்த ஜூன் மாதம், முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் லண்டன் இரவு விடுதி சம்பவத்தில் அணியின் நேர விதிமுறையை மீறியதால் எழுத்துப்பூர்வ எச்சரிக்கை பெற்றதுடன், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இருந்து நீக்கப்பட்டனர். அதன்பின்னர் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து ரூட் மீண்டும் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இழந்தது இங்கிலாந்து.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றிருந்தாலும், கார்ஸ் தொடர்பான சமீபத்திய சம்பவம் அந்த வெற்றியின் முக்கியத்துவத்தை மறைத்துவிட்டதாக ரூட் கடும் அதிருப்தி தெரிவித்தார் கேப்டன் ஜோ ரூட்.
ஜோ ரூட் கூறியதாவது: “நான் வெளிப்படையாகச் சொல்வதானால், இது எனக்கு மிகுந்த எரிச்சலையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நாம் களத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்ற பிறகு, இப்போது அதைப் பற்றிப் பேசாமல், அதற்கு முற்றிலும் தொடர்பில்லாத ஒரு விஷயம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.
இது நடந்துள்ள ஒரு தனிப்பட்ட சம்பவத்தைப் பற்றியது மட்டுமல்ல. ஆட்டத்திற்கு வெளியே நாம் தொடர்ந்து முட்டாள்தனமான தவறுகளைச் செய்து வருவதுதான் பிரச்சினை. அதன் காரணமாக களத்தில் நாம் செய்து வரும் நல்ல செயல்கள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
வீரர்களுக்கான கடுமையான நேரக்கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவருவது இதற்கான தீர்வு என்று நான் இன்னும் நம்பவில்லை. அதைவிட பெரிய ஒன்றை நாம் உருவாக்க வேண்டும். நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கக்கூடிய, நாம் பெருமைப்படக்கூடிய ஒரு கலாசாரத்தை உருவாக்குவது முக்கியம்.
இப்போது நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அப்படியாக நம்மை வெளிப்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. அதே நேரத்தில், மிகவும் வலிமையான, நாம் பெருமைப்படக்கூடிய ஒரு டீம் கலாசாரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பும் நமக்கு இருக்கிறது. அது வீரர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். அது ஒரே இரவில் உருவாகிவிடாது.
இந்த அணியின் வீரர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது, இங்கிலாந்துக்காக விளையாடுவது என்றால் என்ன, அதற்குத் தேவையான அர்ப்பணிப்பு என்ன என்பது குறித்து ஏற்கனவே அணியாகப் பேசியுள்ளோம்.
நம்மைப் பற்றி நாம் பெருமைப்படக்கூடிய ஒன்றை உருவாக்க விரும்புகிறோம். நம்மைப் பின்தொடரும் ரசிகர்களும் நம்மைப் பற்றி பெருமைப்படக்கூடிய ஒரு அணியாக இருக்க விரும்புகிறோம்.” என்றார் ஜோ ரூட்.
ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி வீரர்களுக்கு ஊரடங்கு நேர விதிமுறையை அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால், அத்தகைய கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவருவதற்கு ரூட் ஆதரவு தெரிவிக்கவில்லை.
கார்ஸ் முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை. தற்போது வியாழக்கிழமை லார்ட்ஸில் தொடங்கவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணியிலிருந்தும் அவர் விலக்கப்பட்டுள்ளார்.