

மதுரை: இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக எளிதாக புகார் அளிக்க உரிய வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்த வகுலகிரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு ஜூன் 24-ம் தேதி கூரியர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கூரியர் வந்திருப்பதாகவும், தான் சொல்லும் எண்களை பதிவிடுமாறும் தெரிவித்துள்ளார். அந்த எண்களை பதிவிட்டதும் பெண் ஊழியரின் வாட்ஸ் அப் கணக்கு முடக்கப்பட்டது. அவரது செல்போன் எண்ணில் இருந்து அவரது செல்போனில் உள்ள தொடர்பு எண்களுக்கு வாட்ஸ் அப்பில் பணம் கேட்டு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
உறவினர்கள் மூலம் இதுபற்றி அறிந்த பெண் ஊழியர் உடனடியாக சைபர் கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண், இணையதளம் வழியாக புகாரை பதிவு செய்ய முடியவில்லை. எனவே, யுபிஐ பணப்பரிவர்த்தனை மோசடி உள்ளிட்ட இணைய வழிக் குற்றங்கள் தொடர்பாக எளிதில் புகார் அளிப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை உருவாக்கவும், புகார்களை சுலபமாக பதிவு செய்யும் வகையிலும் இணையதளத்தை மேம்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.