

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூரை, சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் என பல மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய பெரிய கோயில் கம்பீரமாக நிற்கிறது.
தஞ்சாவூர் மாநகராட்சியும், வல்லம் பேரூராட்சியும் தஞ்சாவூர் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இந்த தொகுதியில் முக்குலத்தோர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மராட்டியர்கள், நாடார், முத்தரையர், பட்டியலினத்தவர் கணிசமாக வசித்து வருகின்றனர்.
இந்த தொகுதியில் திமுக 9 முறை, காங்கிரஸ் 4 முறை, அதிமுக 3 முறை, இந்திய கம்யூனிஸ்ட் 1 முறை வெற்றி பெற்றுள்ளன. இதில் குறிப்பாக 1962-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், இந்தத் தொகுதியில் திமுக தலைவர் மு.கருணாநிதி போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து அப்போது தஞ்சாவூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த பரிசுத்த நாடார் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் நிறுத்தப்பட்டார். இதில் கருணா நிதியை ஆதரித்து எம்ஜிஆரும், பரிசுத்த நாடாரை ஆதரித்து காமராஜரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் கருணாநிதி வெற்றி பெற்றார்.
கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டிகேஜி.நீலமேகம் 1,03,772 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி.அறிவுடைநம்பி 56,623 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். நாதக வேட்பாளர் சுபாதேவி 17,366 வாக்குகள் பெற்றார்.
இந்த முறை திமுக சார்பில் மேயராக இருந்த சண்.ராமநாதன், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம், நாதக சார்பில் கிருஷ்ணகுமார், தவெக சார்பில் விஜய்சரவணன் உள்ளிட்டோர் களம் இறங்குகின்றனர்.
இதில், திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் தனது மேயர் பதவிக் காலத்தில் குடிநீர், சாலை, தெரு விளக்குகள் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததையும், 4 முறை உபரி பட்ஜெட்தாக்கல் செய்ததையும் எடுத்துக் கூறிவாக்குச் சேகரித்து வருகிறார்.
அதே நேரத்தில் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு, குப்பைக் கிடங்கில் முறைகேடு போன்ற விவகாரங்களை எதிர்க்கட்சியினர் எழுப்புவது இவருக்கு மைனஸாக உள்ளது.
பாஜக சார்பில் போட்டியிடும் கருப்பு எம்.முருகானந்தம், தான் வெற்றி பெற்றால் மத்திய அரசிடம் பல்வேறு திட்டங்களை பெற்று தஞ்சாவூர் நகரை வளர்ச்சி அடைந்த பெருநகரங்களின் பட்டியலில் இடம் பெற செய்வேன் எனவும், திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தத் தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்படும் என அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்த நிலையில், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால், உள்ளூர் அதிமுகவினர் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர்.
இருந்தாலும், தற்போது அதை மறந்து பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். அதேபோல நாதக கிருஷ்ண குமார், தவெக விஜய்சரவணன் ஆகியோரும் சுறுசுறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு திமுக- பாஜக இடையே தான் போட்டி நிலவுகிறது. இதில், திமுகவை வெல்ல வேண்டும் என்றால் பாஜக கடுமையாக போராட வேண்டிய நிலை உள்ளது.
எதிர்பார்ப்புகள்
* ஜெபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும்.
* பெரிய கோயில் பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பெரிய கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் யாத்ரி நிவாஸ் கட்ட வேண்டும்.
* தஞ்சாவூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏதுவாக ரயில்வே குட்ஷெட்டை ஆலக்குடி, திட்டை ரயில் நிலையங்களுக்கு மாற்ற வேண்டும்.
* தஞ்சாவூரில் பயணிகள் விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும்.
* புதிய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரிக்கு செல்ல, மருத்துவக் கல்லூரி சுற்றுச்சுவரை இடித்து சாலை அமைக்க வேண்டும்.
* தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருத்தரித்தல் மையம் அமைக்க வேண்டும்.
* தஞ்சாவூரின் நீர் ஆதாரங்களாக விளங்கும் கோட்டை அகழி, சமுத்திரம் ஏரி ஆகியவற்றை புனரமைக்க வேண்டும்.
இதுவரை வென்றவர்கள்
1952 - ராமலிங்கம் - இ.கம்யூ.
1952 - மாரிமுத்து - காங்கிரஸ்
1957 - பரிசுத்த நாடார் - காங்கிரஸ்
1962 - மு.கருணாநிதி - திமுக
1967 - பரிசுத்த நாடார் - காங்கிரஸ்
1971 - நடராஜன் - திமுக
1977 - நடராஜன் - திமுக
1980 - நடராஜன் - திமுக
1984 - துரை.கிருஷ்ணமூர்த்தி - காங்கிரஸ்
1989 - உபயதுல்லா - திமுக
1991 - சோமசுந்தரம் - அதிமுக
1996 - உபயதுல்லா - திமுக
2001 - உபயதுல்லா - திமுக
2006 - உபயதுல்லா - திமுக
2011 - ரெங்கசாமி - அதிமுக
2016 - ரெங்கசாமி - அதிமுக
2021 - டிகேஜி.நீலமேகம் - திமுக
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண்கள் - 1,18,648
பெண்கள் - 1,30,369
மூன்றாம் பாலினத்தவர் - 47
மொத்தம் - 2,49,064