Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14
Updated on
5 min read

“நாம் ஒரு குடும்பமாக இருக்கலாம். அதில் 4, 5 பேர் கூட நம்முடன் இருக்கலாம். அலுவலகத்தில் ஒரு குழுவில் நாம் இருக்கலாம். அல்லது ஒரு குட்டி நண்பர்கள் வட்டத்தில் சிறகடித்துக் கொண்டிருக்கலாம். கூட்டம் எதுவாக இருந்தாலும் ஒவ்வொன்றிலும் நம்முடன் கச்சிதமாகப் பொருந்தும் ஒருவர் இருப்பதாலேயே நாம் அதில் நீடித்துக் கொண்டிருப்போம். அந்தப் பிணைப்பில் விரிசல்கள் வரும்போதெல்லாம் அன்பும் மன்னிப்பும் வார்க்கப்பட்டு மீண்டும் மீண்டும் அது உயிர்பெறும். உலக வாழ்க்கையின் அடி நீரோட்டம் இதுதான்.”

2024-ல் வெளியான மலையாள திரைப்படமான ‘உள்ளொழுக்கு’ (Ullozhukku) அன்பாலும் மன்னிப்பாலும் உயிர்பெற்ற உறவையே பிரதிபலிக்கிறது. ‘உள்ளொழுக்கு’ என்றால் அடி நீரோட்டம் என்று பொருள்.

கிறிஸ்டோ டாமி இயக்கிய இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. அஞ்சுவாக பார்வதி திருவோத்தும், லீலாம்மாவாக ஊர்வசியும் நம்மை ஒரு நீர்வழிப் பயணத்துக்குள் கூட்டிச் செல்கின்றனர்.

நீர் என்றால் அது நீர் அல்ல. மனித மனங்கள் காக்கும் ரகசியங்கள், கொள்ளும் குற்ற உணர்வுகள், அருளும் மன்னிப்புகள், சரணடையும் அன்பு போன்ற உணர்வுகளின் ஊடான பயணம் அது.

விதை போதும். இனி கதைச் சுருக்கத்துடன் பயணத்தைத் தொடங்குவோம்.

ஆலப்புழாவின் குட்டநாடு தான் கதைக்களம். கிறிஸ்தவப் பெண்ணான அஞ்சு, இந்து இளைஞன் ராஜீவை விரும்புகிறாள். அதற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு. அஞ்சுவின் விருப்பத்தை சிலுவையில் ஏற்றிவிட்டு அதே ஊரில் வசதியிலும், ‘குடும்ப கவுரவத்திலும்’ ஒசத்தியாக கொண்டாடப்படுகிற லீலாம்மாவின் மகன் தாமஸ் குட்டிக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். காமத்துடன் தொடங்கிறது அவள் திருமண வாழ்க்கை. சில நாட்களிலேயே தாமஸ் குட்டியின் உடல் நிலை பாதிக்கப்படுவதால் ‘கட்டில் மனைவி’யாக இருந்த அஞ்சு ‘கேர் டேக்கர் மனைவி’ ஆகிறாள்.

இந்தியச் சமூகத்தில் இன்னமும் கூட தன் மகனை நல்வழிப்படுத்த, அவனைப் பராமரிக்க ஒரு பெண்ணை திருமணம் என்ற போர்வையில் ‘ஹயர்’ செய்யும் போக்கு குறைந்தபாடில்லை.

அஞ்சு அப்படி ‘ஹயர்’ செய்யப்பட்டவள் எனலாம். உங்களுக்கு மகன் இருந்தால் அவனைப் பொறுப்பாக வளர்த்திடுங்கள். அப்போதுதான் அவனுடைய மனைவி அவனுக்கு வேலைக்காரியாக இல்லாமல் அவனது இணையராக இருப்பாள்.

படத்தில், படுக்கையில் விழுந்த தன் மகனை, இந்தச் சமூக எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கவனிக்கும் மருமகள் அஞ்சுவை தாங்குகிறாள் லீலாம்மா.

ஒருநாள் அவர்களின் உரையாடலின்போது மருத்துவம் படிக்க விரும்பி, அதற்கான மதிப்பெண் தகுதி இருந்தும் குடும்பத்தினர் தன்னை திருமணத்துக்குள் தள்ளியதையும். அடுத்தடுத்து பிள்ளைகளைப் பெற்றதையும், அவர்களை வளர்ப்பதிலேயே வாழ்நாள் கழிந்ததையும் சொல்வதோடு, தன் வாழ்க்கையின் மீது கடவுளே பொறாமை கொண்டு கணவனை பறித்ததாகவும், இப்போது மகனை படுக்கையில் கிடத்தியதாகவும் கூறுகிறாள் லீலாம்மா.

அமைதியாக அதைக் கேட்கும் அஞ்சு, லீலாம்மாவும் தன்னைப் போலவே விருப்பமில்லாது திருமணத்துக்குள் தள்ளப்பட்டதை மட்டும் உள்வாங்கிக் கொள்கிறாள்.

இங்கே அஞ்சுவும் லீலாம்மாவும் ஆணாதிக்க சமூகத்தின் விக்டிம்கள் எனக் கொள்ளலாம்.

திருமணத்தை தீர்மானிக்கும் உரிமை இன்னமும் ஆண்களிடம் தானே இருக்கிறது!

தனது முந்தைய ஆவணப் படம், Curry & Cyanide: The Jolly Joseph Case-ல் குடும்பத்தால் திணிக்கப்படும் விருப்பமில்லா திருமணமே 6 பேரை கொலை செய்யும் அளவிலான கொடூர மனநிலைக்கு வித்திட்டதாக இயக்குநர் கிறிஸ்டோ டாமியின் தொட்டுச் சென்றிருப்பார். அந்த நரேஷனைக் காண்கையில், ஒரு விக்டிமான ஜாலி ஜோசப் பலரை விக்டிமாக்கியதாக நாம் புரிந்து கொள்ளக்கூடும். ஆனால் அஞ்சுவும் லீலாம்மாவும் அப்படியல்ல.

‘பேட்ரியார்கி விக்டிம்’-களாக தாங்கள் பெற்ற ஏமாற்றங்களை கடக்கின்றனர் அஞ்சுவும் லீலாம்மாவும். தடுமாற்றங்களில் இருந்து மீள்கின்றனர். தன்னிலை உணர்கின்றனர். வாழ்வை தகவமைத்துக் கொள்கின்றனர்.

தாமஸ் குட்டி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வேலையில், அஞ்சு கர்ப்பம் குடும்பத்துக்கே தெரிந்து விடுகிறது, தாமஸ் குட்டி மட்டும் அதை அறியாமல் மரித்துப் போகிறான்.

சில மாத வாழ்க்கையில் அன்பால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத கணவனின் மறைவால் அஞ்சுவுக்கு எந்தக் கவலை உணர்வும் எழவில்லை. மாறாக, கர்ப்பம் பற்றிய பதற்றம் விரிகிறது. மறுபுறம், மகனை இழந்தாலும் அவன் வாரிசு வளர்வது லீலாம்மாவுக்கு ஆசுவாசம் தருகிறது.

அஞ்சுவின் பதற்றமும், லீலாம்மாவின் ஆசுவாசமும் என்னவாகிறது. அவர்களுக்குள் எப்படியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை ஓடம் மீது ஒரு பாடம் போல் நகர்த்துகிறார் இயக்குநர்.

தாமஸ் குட்டிக்கு சிறு வயதிலிருந்தே மழை, வெள்ளம் மீது கடும் பயம். அவன் மரணித்தபோது, அவன் கண்டு அஞ்சிய மழையும், வெள்ளமும் அவன் இறுதிச் சடங்கை ஒத்திப்போடுகிறது. அவனது பிரேதம் கூட வீடு வர நாளாகிறது. வந்தும் இடுகாடு செல்ல இயலாமல் கிடக்கிறது. சவமாக தனித்துக் கிடக்கிறான் தாமஸ் குட்டி. நடப்பவையேதும் உணர முடியாத ‘சவசாட்சி’-யாகக் கிடக்கிறான்.

இந்த உலக வாழ்க்கையில் நாம் அழுது பிறக்கும்போது நமக்காக அத்தனை பேர் காத்திருந்தனர் என்ற பிரக்ஞை நமக்கிருக்காது. அன்று நாம் ஒரு தனி உயிராகவே இருந்திருப்போம். பின்னர் சுற்றி பலர் நின்று அழுக, நாம் மரணித்துக் கிடக்கும்போதும் நாம் ஒரு தனி உயிர்தான். இடைப்பட்டக் காலங்களிலும் கூட அப்படித்தான். அதில் உறவுகள் நம் மேல் பூசப்படும், நாமாக விரும்பிப் பூசிக் கொள்ளும் அரிதாரம். ஆனால், அவசியமான அரிதாரம். எதைக் கூட்டி எதைக் குறைக்கிறோம் என்பதில் தான் வாழ்க்கையின் அழகியல் இருக்கிறது.

அந்த வகையில், சமூகம் திணித்த வாழ்க்கை சோபிக்கவில்லை என்பதால் அஞ்சு தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட காதலனின் அன்பை சற்று அதிகமாகவே பூசிக் கொண்டு கர்ப்பமாகிறாள். அந்த கருவுக்கு தாமஸ் குட்டி குடும்பம் உரிமை கொண்டாட முயற்சிக்க, மீண்டும் சமூகம் தன் மீது எதையாவது திணிப்பதற்குள் விடுபட முயற்சிக்கிறாள்.

லீலாம்மா தன் அன்பு மகனுக்கு திருமணமாக வேண்டும், அவன் குடும்பம், குழந்தை என்று இருக்க வேண்டும் என்ற வாஞ்சையால், இன்னொரு பெண்ணின் வாழ்க்கை / எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் சுயநலத்தை சற்று அதிகமாகவே பூசிக்கொண்டதால், மகன் இறந்தாலும் அந்த உறவை ரீப்ளேஸ் செய்ய பேரக் குழந்தைக்கு ஸ்வெட்டர் பிண்ணுவதும், தூளியை எடுத்து கூடத்தில் வைப்பதாகவும் இருக்கிறாள்.

இருவரும் ஒருவரின் ரகசியம் இன்னொருவருக்குத் தெரியாமல் கமுக்கமாக இருக்கின்றனர். அதை உடைப்பதில் லீலாம்மாவுக்கு சூழல் முதலில் சாதகமாகிறது. ஒரு நாள் அவளுள் சந்தேகப் புள்ளி வருகிறது. அதன் நீட்சியாக அவள் அஞ்சுவிடம் காட்டும் பாராமுகத்துக்கு, “எல்லா விஷயங்களும் திடீரென்று தான் தெரிகிறது,” என்று கூறுவது தத்துவ ரகம்!

தவறுகள் மனித இயல்பு. அதேபோல், செய்தவர் அதை ஒப்புக் கொள்வதும், பாதிக்கப்பட்டவர் மன்னிப்பு நல்குவதும் மனிதர்களின் பண்பு.

“இது தாமஸ் குட்டியின் வாரிசு இல்லை. என் விருப்பம் ராஜீவ் தான். தாமஸ் குட்டியை அடக்கம் செய்ததும் நான் இங்கிருந்து சென்று விடுவேன்” என்று அஞ்சு ஒப்புக் கொள்வதும், “என்னை விட உன்னை யாரும் முழுவதுமாக புரிந்துகொள்ள முடியாது” என்று லீலாம்மா சொல்வதும் தவறும், மன்னிப்பும் பூரணமாய் ஜொலிக்கும் காட்சி.

இருந்தாலும், அஞ்சு தன்னுடன் தங்கிவிடமாட்டாளா என்ற ஏக்கம் லீலாம்மாவுக்குப் போகாது. அஞ்சு விடுபடுவதற்கும், லீலாம்மா அவளை தன்னோடு வைத்துக் கொள்வதற்கும் ஒரே துருப்புச் சீட்டு தாமஸ் குட்டியின் பிரேதம். அதை அத்தனை சீக்கிரம் அடக்கம் செய்யவிடாமல் பார்த்துக் கொள்வாள் லீலாம்மா. ஆனால் அந்த திட்டமிட்ட தாமதமே அவள் மறைத்துவைத்த ரகசியத்தை அஞ்சுவுக்கு அம்பலப்படுத்தும்.

மகனின் ட்யூமர் நோய் தெரிந்தே தன்னை மருமகளாக்கிய லீலாம்மாவை தண்டிக்க வேண்டும் என்ற வைராக்கியம் அஞ்சுவுக்கு பிறக்கும். அன்றைய இரவு தாமஸ் குட்டி பிரேத சாட்சியாக இருவரும் பேசிக் கொள்வர். அங்கே, லீலாம்மா வாழும் போலியான வாழ்க்கையை போட்டுடைப்பாள் அஞ்சு. தன்னைப் போலவே அன்பில்லாத திருமண வாழ்க்கையை லீலாம்மாவும் வாழ்ந்ததாகச் சொல்வாள். தன்னால் இனியும் அத்தகைய வாழ்க்கைக்குள் தன்னை அடக்க முடியாது. இனி ராஜீவுடன் வாழ்வதை எதுவும் தடுக்காது என்று சூளுரைப்பாள்.

‘உண்மை’ போல் ஒருவரை விடுவிக்கக் கூடியது எதுவும் இருக்காது.

லீலாம்மாவும் தன் சகோதரி கன்னியாஸ்திரி ரோசம்மா மூலம் தாமஸ் குட்டியின் உடல்நிலையை தான் மறைத்தது அஞ்சுவுக்கு அம்பலமானது பற்றி, “ஒரு விதத்தில் உன் மூலமாக அஞ்சுவுக்கு உண்மை தெரிந்ததில் எனக்கு நிம்மதி. நான் மகன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதில் அஞ்சு பாதிக்கப்படுவாள் என்று யோசிக்கவில்லை” என்று சொல்வாள்.

கூடவே, “நீ குடும்பம் இல்லாமல் தனியாக இருக்கிறாய். நான் குடும்பம் இருந்தும் தனியாகத் தான் உணர்கிறேன்” என்று கூறி, கூட்டத்தில் இருந்தாலும் மனிதர்கள் தனித்தனியானவர்கள் தான் என்ற யதார்த்தத்தை விளக்குவாள்.

லீலாம்மாவின் மன்னிப்புக்கு ஆக்டோபஸ் கரங்கள். அவள், அஞ்சுவின் தந்தை ஜார்ஜிடம், அவளை அவள் போக்கில் விட்டுவிடும்படி பரிந்துரைப்பாள். “நேர்மை, குடும்ப கவுரம் இதெல்லாம் நம் குழந்தைகளை மகிழ்ச்சியாய் வைக்காது என்றால். அதற்கு அர்த்தமென்ன?” என்பாள்.

கட்டாயத் திருமணங்களும், ஆணவக் கொலைகளும் செய்யத் துணியும் கோணல் மனங்கள் கற்க வேண்டிய பாடம் அது.

தாமஸ் குட்டியின் பிரேதத்தை டவுன் சிமெட்ரியில் அடக்கம் செய்ய லீலாம்மா ஒப்புதல் அளித்துவிட்டு அஞ்சுவுடன் மனம் விட்டுப் பேசும் காட்சிகள் நிஜ வாழ்வில் காணக் கிடைக்காத அற்புதம். நம்மைச் சுற்றி நடப்பவை சினிமாக்கள் ஆவதுபோல், ‘உள்ளொழுக்கு’ படத்தின் அந்தக் காட்சிகள் எங்கேயேனும் நடந்துவிடக் கூடாதா என்றிருந்தது.

அஞ்சு அவளது வாழ்க்கையைத் தொடர வேண்டும், ஆனாலும் தன்னுடனான பிணைப்பை விட்டுவிடக் கூடாது என்ற ஏக்கமும், தன் வாரிசு அல்லாத குழந்தைக்கு முதல் தங்கச் சங்கிலியை பரிசாகக் கொடுக்கும் கருணையும், “நான் உங்களை வேதனைப் படுத்தியதற்காக என்னை வெறுத்து விடாதீர்கள்; நானும் குழந்தையும் உங்களை அவ்வப்போது காண வருவோம்” என்ற உத்தரவாதமும் எங்கோ நிகழ்வதால்தான் இன்னும் உலகம் உயிர்ப்புடன் இருக்கிறது.

அந்த அன்பையும், மன்னிப்பையும் பெற்றவளாகத் தான் தாமஸ் குட்டிக்கு இறுதி முத்தமிட்டு, “நான் உன்னை மன்னித்துவிட்டேன்; நீயும் என்னை மன்னித்துவிடு” என்பாள் அஞ்சு.

நம்மைச் சார்ந்தோரின் தவறுகளின் தன்மையைப் பொறுத்து, முத்த மன்னிப்புகளை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வழங்குவோமாக!

தாமஸ் குட்டி சவக்குழிக்குள் செல்வதோடு அஞ்சுவும் ராஜீவை அடைவாள் என்று நாம் நினைக்கும்போது, ராஜீவின் தடித்த வார்த்தைகள் அவளை விழித்துக் கொள்ள வைக்கும்.

‘உன் கருவில் இருப்பது என் மகனின் வாரிசு இல்லாவிட்டாலும் நான் உன்னை நேசிக்கிறேன்’ என்ற லீலாம்மாவின் அன்பும் மன்னிப்பும் ஒருபுறம், ‘வேறு ஆண்மகனோடு படுக்கையைப் பகிர்ந்தாலும் உன்னை நான் காதல் செய்கிறேன்’ என்ற ராஜீவின் கழிவிரக்கமும் துலாபாரத்தில் தொங்க, லீலாம்மாவின் அன்பு அதில் வெற்றி பெறும். அஞ்சு உணர்வது இதுதான்...

கழிவிரக்கத்தால் வரும் கரிசனங்கள் எதுவுமே அன்புக்குள் அடங்காது!

காரில் இருந்து உடைமைகளை எடுத்துக் கொண்டு ராஜீவிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் லீலாம்மாவுடன் அஞ்சு செல்ல தயாராகும்போது எனக்கு நினைவுக்கு வந்த Owl City குழுவின் பாடல் வரிகள் இவை...

“நான் என் கைகளைப் பார்த்து வருத்தப்படும் வரை, இந்த அமைதி அவ்வளவு மோசமானதல்ல. ஏனென்றால், என் விரல்களுக்கு இடையேயான இடைவெளிகள், உன்னுடைய விரல்கள் கச்சிதமாகப் பொருந்தும் அதே இடத்தில்தான் இருக்கின்றன.”

ஆம், அத்தனை பேரும் கரையில் நிற்க, லீலாம்மாவுடன் படகில் ஏறிக் கொண்டு அமைதி காக்கும் அஞ்சு, அவள் கரம் பற்றி அந்த விரல்கள் இடைவெளியில் கச்சிதமாக தன் விரல்கள் பொருத்தி இன்னொரு நீர் வழிப் பயணத்தை தொடங்குவாள்.

பயணங்கள் முடிவதில்லை... அன்பும் மன்னிப்பும் இருந்தால்!

|தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14
Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in