புதுச்சேரி கதிர்காமம் மருத்துவமனை அவலம் - பரவும் வீடியோவால் அதிர்ச்சி

புதுச்சேரி கதிர்காமம் மருத்துவமனை அவலம் - பரவும் வீடியோவால் அதிர்ச்சி
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் படிக்கட்டில் காலி மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகள் கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மருத்துவமனை பராமரிப்பு குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு புதுச்சேரி மட்டுமின்றி, புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை முறையான பராமறிப்பின்றி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையின் மாடிப் படிக்கட்டில் காலி மது பாட்டில்கள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அங்கு குப்பைகளும் தேங்கி துர்நாற்றம் வீசியதால், மருத்துவமனைக்கு சென்ற பொதுமக்களும், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டிய மருத்துவமனை வளாகத்தில், மது பாட்டில்களும், குப்பைகளும் கிடப்பதை பொதுமக்களில் சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைகள் முறையான பராமரிப்பின்றி, சேதமடைந்தும், கறைபடிந்தும் சுகாதாரமற்ற நிலையிலும் காணப்படும் மற்றொரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறைகள் முறையாக தூய்மைப்படுத்தப்படாமல் உள்ளது.‌ இதனால் அவை நோய் பரவும் இடமாக மாறும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மருத்துவமனை படிக்கட்டில் மதுபாட்டில்கள் கிடப்பது மற்றும் கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் இரண்டு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி, மருத்துவமனை நிர்வாகத்தின் பராமரிப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

புதுச்சேரி கதிர்காமம் மருத்துவமனை அவலம் - பரவும் வீடியோவால் அதிர்ச்சி
நேபாள வெள்ளப் பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 380+ சுற்றுலா பயணிகள் மாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in