நேபாள வெள்ளப் பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 380+ சுற்றுலா பயணிகள் மாயம்

இதுவரை 18 பேர் உயிரிழப்பு | இந்தியா உதவிக்கரம்
நேபாள வெள்ளப் பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 380+ சுற்றுலா பயணிகள் மாயம்
Updated on: 
2 min read

காத்மண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி நேபாள - திபெத் எல்லைப் பகுதிகளில் 18 பேர் உயிரிழந்த நிலையில், 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இதில் 105 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ரசுவா மாவட்டத்தில் போட்டே கோசி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சற்றும் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 18 பேர் உயிரிழப்பு என உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இதில் 105 பேர் இந்தியர்கள்.

மாயமான வெளிநாட்டவர்கள் இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 105 இந்தியர்களை காணவில்லை. இவர்கள் சாம்ராட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ், லீஃப் ஹாலிடே போன்ற சுற்றுலா ஏஜென்சிகள் மூலம் சென்றவர்கள் என்று தெரிகிறது.

இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் குறித்த விவரங்களை அறிய 1234 என்ற கட்டணமில்லை அவசர எண், 1144 என்ற ஹாட்லைன் எண், 98512 89445 என்ற சுற்றுலா காவல்துறை தொடர்பு எண் ஆகியனவற்றை நேபாள சுற்றுலா துறை அறிவித்துள்ளது.

இந்தியத் தூதரகம் அவசர எண்கள் அறிவிப்பு:

இதற்கிடையில், நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அவசர எண்களை அறிவித்துள்ளது. +977 985 131 6807, +977 970 910 7500 ஆகிய எண்களில் தங்களின் உறவுகள் பற்றி விவரம் அறிய, தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

நேபாள வெள்ளப் பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 380+ சுற்றுலா பயணிகள் மாயம்
கும்பகோணத்தில் இருந்து நேபாளம் சென்ற பயணிகளின் நிலை என்ன? - டிராவல்ஸ் நிறுவனம் தகவல்

புரட்டிப் போட்ட திடீர் வெள்ளப் பெருக்கு:

நேபாள நாட்டின் வட பகுதியில் உள்ளது ரசுவா மாவட்டம். இது திபெத் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் திடீரேன வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அதுமட்டுமல்ல பெரிய பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

கங்கையின் கிளை ஆறுகளான கோசி, கண்டக் ஆறுகள் நேபாளத்திலும், பிஹாரிலும் ஓடுகின்றன. அதனாலேயே இந்த ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிஹாரிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் இந்த வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இன்னும் முழு வீச்சில் மதிப்பீடு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காரணம் தெரியவில்லை:

அதேபோல், திடீரென இத்தகைய வெள்ளப் பெருக்கு ஏற்பட என்ன காரணம் என்று ஆராய்ந்து வருவதாக நேபாள மழை, வெள்ள கணிப்பு மையம் தெரிவித்துள்ளது. ரசுவா மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்திருந்தாலும்கூட அது இந்த அளவுக்கு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும், ஒருவேளை திபெத் பகுதியில் ஏதேனும் பனிப்பாறை உருகி வெடித்து அதன்மூலம் இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதா என்பது குறித்தும் ஆய்வுகள் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத்திலும் பாதிப்பு:

இதற்கிடையில், திபெத்திலும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிலரைக் காணவில்லை என்றும் சீனாவின் அரசு ஊடகமான சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

திபெத் - நேபாள எல்லையில் உள்ள கிராங் பகுதியில் பாதிப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்பகுதியில் காணாமல் போனவர்களைத் தேடும்படியும், வேறேதும் பேரிடர்கள் தொடரக்கூடுமா என்பதை ஆராய்ந்து கண்காணிக்கவும் அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக சினுவா தெரிவித்துள்ளது.

பிஹார் தலைமைச் செயலர் உத்தரவு:

பிஹாரில் தலைமைச் செயலர் பிரத்யாயா அம்ரித், காணொளிக் காட்சி மூலாம் கோசி, கண்டக் ஆறு பாயும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். நேபாள திடீர் வெள்ளப் பெருக்கை கவனத்தில் கொண்டு ஆற்றங்கரையோரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், தேவைப்பட்டால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் ஷா அவசர ஆலோசனை:

நேபாள பிரதமர் பலேந்திரா ஷா, அமைச்சர்களுடனான அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். வெள்ளப் பெருக்கு, சேத விவரங்கள் மற்றும் மீட்புப் பணிகள் பற்றி அந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காவல்துறை, நேபாள ராணுவம், ஆயுதப் படை ஆகியன மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிக்கு 2 ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உதவிக்கரம்:

நேபாள திடீர் வெள்ளப் பெருக்கு தொடர்பாக நேபாள பிரதமர் பலேந்திரா ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் துயர்மிகு நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் அனைத்துவிதமான உதவிகளையும் இந்தியா செய்யும் என்று உறுதியளித்துள்ளார்.

நேபாள வெள்ளப் பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 380+ சுற்றுலா பயணிகள் மாயம்
கும்பகோணத்தில் இருந்து நேபாளம் சென்ற பயணிகளின் நிலை என்ன? - டிராவல்ஸ் நிறுவனம் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in