

சிவகாசி: சிவகாசி பகுதியில் சாரல் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சிவகாசி பகுதியில் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் 75 சதவீதம் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி பெற்ற பேன்சி உள்ளிட்ட அனைத்து வகையான பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் ஆகும்.
நாட்டின் மொத்த தேவையில் 90 சதவீதத்துக்கும் மேல் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு தீபாவளியை மையமாக வைத்து ஆண்டு முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்யவும், சரவெடி ரக பட்டாசுகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால், பல்வேறு வகையிலான பட்டாசுகளை உற்பத்தி செய்யவும் முடியாத நிலை உள்ளது. சக்கரம், புஸ்வாணம், பிஜிலி வெடி, குருவி, லட்சுமி, பாம், கம்பி மத்தாப்பு, வானில் உயர சென்று வெடிக்கும் பேன்சி ரக பட்டாசுகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அதில் புஸ்வாணம் மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் பல்வேறு வடிவங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. பட்டாசு உற்பத்தியில் ஒவ்வொரு படிநிலையிலும் உலர்த்துதல் மிக முக்கிய பணி என்பதால் வெப்பநிலை முக்கிய பங்கு வகிக்கிறது. சிவகாசி பகுதியில் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் மழை இல்லாமல் அதிக வெப்பநிலை நிலவுவதால் பட்டாசு உற்பத்திக்கு ஏற்ற சூழல் உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஏற்பட்ட தொடர் பட்டாசு ஆலை வெடி விபத்துகள் மற்றும் கட்டுப்பாடுகளால் வெயில் காலமான ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் பட்டாசு உற்பத்தி முடங்கியது. கடந்த 2 மாதங்களாக சிவகாசி பகுதியில் உள்ள ஆலைகளில் பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிவகாசி பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயில் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதுடன் மேகமூட்டமாக காணப்படுகிறது. மேலும் நேற்று பிற்பகல் நேரத்தில் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதியில் சாரல் மழை பெய்ததால் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியதாவது: பட்டாசுகளை பல்வேறு படி நிலைகளில் 4 முதல் 7 நாட்கள் வரை சூரிய ஒளியிலும், நிழலிலும் காய வைக்க வேண்டும். ஒரு வாரமாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வெளியில் காய வைக்க அச்சமாக உள்ளது. பட்டாசு நன்கு உலரவில்லை என்றால் நன்றாக வெடிக்காது. ஏற்கெனவே இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி குறைந்துள்ள நிலையில், தற்போது தீபாவளி நேரத்தில் மழை தொடங்கி உள்ளதால் உற்பத்தி மேலும் குறையும் என்று கூறினர்.