குடும்பத் தகராறில் துப்பாக்கி முனையில் மிரட்டல்: ஆதனூர் ஊராட்சி திமுக தலைவர், மருமகன் கைது

குடும்பத் தகராறில் துப்பாக்கி முனையில் மிரட்டல்: ஆதனூர் ஊராட்சி திமுக தலைவர், மருமகன் கைது
Updated on
1 min read

படப்பை: படப்பை அருகே குடும்பத் தகராறு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ் அமுதன் மற்றும் அவரது மருமகன் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து உரிமம் பெற்ற துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே ஆதனூர் ஊராட்சி திமுக தலைவர் தமிழ் அமுதனின் வீட்டில் அவரது மகள் ஓவியா, மருமகன் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வசித்து வருகின்றனர். குடும்பப் பிரச்சினை காரணமாக தமிழ் அமுதன், தமிழ்ச்செல்வன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

அப்போது ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன், தன்னிடமிருந்த துப்பாக்கியைக் காட்டி தமிழ் அமுதனை மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கிருந்த தமிழ் அமுதனின் உறவினரான டேனியல், தமிழ்ச்செல்வனிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி, அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ் அமுதன் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல் தான் தாக்கப்பட்டதாக தமிழ்ச்செல்வனும் தாம்பரம் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்தார். இருதரப்பு புகார்களின் அடிப்படையில் மணிமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தமிழ் அமுதன், தமிழ்ச்செல்வன் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் டேனியலை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

குடும்பத் தகராறில் துப்பாக்கி முனையில் மிரட்டல்: ஆதனூர் ஊராட்சி திமுக தலைவர், மருமகன் கைது
சென்னையில் பெண்ணிடம் 155 பவுன் பறித்த போலி வழக்கறிஞர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in