திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் அடுத்தடுத்து தொகுதி உடன்பாடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. நேற்று காலை விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு 7.15 மணியளவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.சுதீஷ் எம்.பி, விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் ஒப்பந்தத்தில் ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த் கையெழுத்திட்டனர்.
தற்போதைய நிலையில் காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, சிபிஐ 5, சிபிஎம் 5, மதிமுக 4, முஸ்லிம் லீக் 2, மமக 2, கொமதேக 2 என திமுக கூட்டணியில் இதுவரை 66 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “எந்தெந்த தொகுதிகளில் தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அந்த தொகுதிகளின் விருப்ப பட்டியலை திமுகவிடம் கொடுத்து இருக்கிறோம். விரைவில் எங்களுக்கான தொகுதிகளை கேட்டு பெறுவோம். 27-ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்; 1-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்வோம். மொத்தமாக 25 தொகுதிகள் அந்த பட்டியலில் இருக்கிறது. நாங்கள் கடைசியாக திமுக கூட்டணிக்கு வந்தோம், அதனால்தான் தாமதமாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. நாங்களும் தொகுதிகளை விட்டுக்கொடுத்து இருக்கிறோம்” என்றார்.
முன்னதாக நேற்று காலை சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, விசிக-வுக்கு 6 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் என மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்தத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் திருமாவளவன், கூறியதாவது: எங்கள் கட்சியினர் இரட்டை இலக்கத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கோரினர். இருப்பினும், மதவாத மற்றும் சாதிவெறி சக்திகளை வீழ்த்த வேண்டும் என்ற கூட்டணியின் நன்மையைக் கருதி 8 தொகுதிகளுக்கு உடன்பட்டுள்ளோம். விசிக ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்பதால், எங்கள் சொந்தச் சின்னமான பானை சின்னத்திலேயே போட்டியிடுவோம். திமுக வழங்கியுள்ள இந்த இடங்கள் இடதுசாரி அரசியலைப் பாதுகாப்பதற்கான அங்கீகாரம்.
புதுச்சேரியில் கடைசி நிமிடம் வரை கூட்டணி உறுதி செய்யப்படாததால், முன்னெச்சரிக்கையாக ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய 3 தொகுதிகளில் விசிக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது. எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையிலும், அங்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் மனுவைத் திரும்பப் பெறத் தயாராக இல்லை. திமுக போட்டியிடும் சில இடங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்திருப்பது ‘ஃப்ரெண்ட்லி ஃபைட்’ என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, புதுச்சேரியில் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளோம். இருப்பினும், மனுவைத் திரும்பப் பெற இன்னும் கால அவகாசம் இருப்பதால், பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவு காண வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.