234 தொகுதிகளிலும் மார்ச் 30-ல் நாதக வேட்பாளர்கள் மனு தாக்கல்

234 தொகுதிகளிலும் மார்ச் 30-ல் நாதக வேட்பாளர்கள் மனு தாக்கல்
Updated on
1 min read

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நாளில் அதாவது மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டுமென அக் கட்சியின் வேட்பாளர்களுக்கு, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக மற்ற அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் மும்முரம் காட்டி வரும் வேளையில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவித்து, நாதக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் என மொத்தம் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார் சீமான்.

அந்த வரிசையில் தற்போது வேட்புமனுத் தாக்கலிலும் ஒரு புதிய நடைமுறையை அக்கட்சி பின்பற்ற திட்டமிட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மார்ச் 30-ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, நாதக-வின் 234 வேட்பாளர்களும், அவர்களுக்கு மாற்றாக நியமிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களும், வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் முதல் நாளான மார்ச் 30 அன்றே தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என சீமான் அறிவுறுத்தியுள்ளார்.

ஒரே மேடையில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியது போலவே, தமிழகம் முழுவதும் ஒரே நாளில் அனைத்து வேட்பாளர்களும் மனுத் தாக்கல் செய்வதன் மூலம் தங்களின் ஒற்றுமையையும், தேர்தல் களத்தில் தங்களின் தயார் நிலையையும் பறைசாற்றும் வகையில் கட்சி தலைமை இவ்வாறு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி வேட்பாளர்கள் அனைவரும் எவ்வித தாமதமுமின்றி அன்றைய தினமே மனுத் தாக்கல் செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கட்சி தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

234 தொகுதிகளிலும் மார்ச் 30-ல் நாதக வேட்பாளர்கள் மனு தாக்கல்
தேர்தல் விதிகளால் மது விற்பனைக்கு கட்டுப்பாடு: ஒரு நபருக்கு அதிகபட்சம் 6 ‘ஃபுல்’ மட்டுமே விற்க வேண்டும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in