அரியலூரில் இரு பெண்களுக்கு இடையே மோதல் - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

தாக்குவதற்கு கத்தியுடன் வரும் பெண் மற்றும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்

தாக்குவதற்கு கத்தியுடன் வரும் பெண் மற்றும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்

Updated on
1 min read

அரியலூர்: கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால், கடன் வாங்கிய பெண் தாக்கியதில் கடன் கொடுத்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரியலூர் காந்தி மார்க்கெட்டில் நடந்த இந்த மோதல் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி(46). இவர் அரியலூர் காந்தி மார்க்கெட்டில், தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து தனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் கொளஞ்சி(48). செல்வராணியின் உறவுக்கார பெண்மணியான இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவசரத் தேவைக்காக ரூ.1 லட்சம் பணத்தை செல்வராணியிடம் கடனாகப் பெற்றுள்ளார்.

கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கொளஞ்சியிடம் செல்வராணி அவ்வப்போது கேட்டு வந்துள்ளார். பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்திய கொளஞ்சி, ஒருகட்டத்தில் அல்லிநகரம் கிராமத்திலிருந்து அரியலூருக்கு இடம்மாறி குடி பெயர்ந்துள்ளார்.

அரியலூரில் கொளஞ்சியின் முகவரி தெரியாததால், பணத்தை திரும்பப் பெற முடியாமல் செல்வராணி தவித்து வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று வழக்கம் போல அரியலூர் காந்தி மார்க்கெட்டில், தனது காய்கறி வியாபாரத்தை செல்வராணி செய்து வந்துள்ளார்.

அப்போது கறி வாங்குவதற்காக கொளஞ்சி அரியலூர் காந்தி மார்க்கெட் வந்துள்ளார். கொளஞ்சியை கண்ட செல்வராணி தன்னிடம் வாங்கிய பணத்தை எப்போது திருப்பி தருவாய்? என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த கறிக்கடை கத்தியை எடுத்த கொளஞ்சி, செல்வராணியை வெட்ட ஆவேசமாக பாய்ந்துள்ளார்.

உடனடியாக சுகாரித்துக் கொண்ட கறிக்கடைக்காரரும், பொதுமக்களும் கொளஞ்சியிடமிருந்து கத்தியை பிடுங்கி உள்ளனர். அப்போதும் ஆத்திரம் அடங்காத கொளஞ்சி, செல்வராணியின் தலைமுடியை இழுத்துப் போட்டு அடித்ததுடன், அவர் காதில் அணிந்திருந்த தோட்டை கையுடன் பிடித்து இழுத்துள்ளார்.

இதில் செல்வராணியின் காது அறுந்து தோடு தனியே விழுந்துள்ளது. இதனைக் கண்டு திகைத்த பொதுமக்கள் உடனடியாக செல்வராணியை மீட்டு, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் அதிகம் உள்ள இடத்தில் கடனாகக் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணின், காதையே பிய்த்து தாக்கிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அரியலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

<div class="paragraphs"><p>தாக்குவதற்கு கத்தியுடன் வரும் பெண் மற்றும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள&nbsp;பெண்</p></div>
மேட்டூர் அணை மதகுகளின் தரம் குறித்து ஆய்வு - பாதுகாப்பை வலுப்படுத்த திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in