

மேட்டூர்: மேட்டூர் அணையில் விரிவான அணை பாதுகாப்பு மதிப்பீட்டு குழுவின் நீரியல் மற்றும் இயந்திரவியல் நிபுணர் குல்சன் ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், மதகுகளின் செயல்பாடுகள், தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டூர் அணையில் விரிவான அணை பாதுகாப்பு மதிப்பீட்டு குழுவின் நீரியல் மற்றும் இயந்திரவியல் நிபுணர் குல்சன் ராஜ் இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது, அணையின் இடது கரை, வலது கரை, ஆய்வு சுரங்கம், கவர்னர் பாயின்ட், நீர் அளவீட்டு கருவிகள், தானியங்கி அளவீட்டு கருவிகள், மேல் மற்றும் கீழ் மட்ட மதகு பகுதி, நில அதிர்வு கருவிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
அணையின் வலது கரையில் 5, 8 கண் மதகு மற்றும் இடதுகரையில் உள்ள 16 கண் மதகுகளை ஏற்றி, இறக்கியும் மதகுகளின் இயக்கம், பராமரிப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, படகு மூலம் சென்று மதகுகளை பார்வையிட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், 16 கண் மதகு வழியாக வெள்ள உபரிநீர் திறக்கப்படும் போது மேற்கொள்ளப்படும் பணிகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
ஆய்வு அறிக்கை விரைவில் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அணையை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை விரிவு படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின் போது, மேட்டூர் அணை செயற்பொறியாளர் வெங்கடாஜலம், உதவி பொறியாளர் சதிஷ், பிரசாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.