

சென்னை: இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கியூட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. முதல் நாள் தேர்வில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர கியூட் எனப்படும் பல்கலைக்கழக பொதுநுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இத்தேர்வை மத்திய அரசு சார்பில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அந்த வகையில் 2026-2027-ம் கல்வி ஆண்டு சேர்க்கைக்கான இளநிலை பட்டப்படிப்பு கியூட் நுழைவுத்தேர்வு மே 11 முதல் 31 வரை நடைபெறும் என என்டிஏ அறிவித்தது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜனவரி 3-ல் தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சத்து 68 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
அவர்களுக்கான ஹால் டிக்கெட் மே 7-ந் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி கியூட் தேர்வு நேற்று தொடங்கியது.
கணினி வழியில் நடத்தப்படும் இத்தேர்வை சென்னை உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களிலும், ஷார்ஜா, அபுதாபி, ரியாத், குவைத், மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூர் உள்பட 14 சர்வதேச நகரங்களிலும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இத்தேர்வு மே 31-ம் தேதி முடிவடைகிறது.