

சென்னை: குற்ற வழக்குகளில் ஒருவரை கைது செய்யும்போது போலீஸார் அரசியலமைப்புச் சட்டத்தின்படி கடைபிடிக்க வேண்டிய கட்டாய வழிமுறைகள் என்ன என்பது குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மற்றும் கோவையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த ஃபிட்ஜி என்ற தனியார் கல்வி பயிற்சி மையங்கள் கடந்த ஆண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டன. அந்த மையத்தில் பயின்ற மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணம், முன்வைப்புத் தொகையை திருப்பித் தரவில்லை என பாதிக்கப்பட்ட 533 பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் ரூ. 10.63 கோடியை மோசடி செய்ததாக அந்த மையத்தின் தமிழக நிர்வாக பங்குதாரரான அங்குர் குமார் ஜெயின் என்பவரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர்.
அங்குர் குமார் ஜெயினுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி என்.ரமேஷ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ் மற்றும் வழக்கறிஞர் ஆர்.அஸ்வின் ஆகியோர், “மனுதாரர் மாற்றுத்திறனாளி.
அவரது செயற்கை கால் சேதமடைந்து சிறையில் நடமாட முடியாத நிலையில் உள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டனர். ஜாமீனவழங்கக்கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ரமேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கிலும் கைது நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாகவும், இயந்திரத்தனமாகவும் உள்ளது.
ஒருவரை கைது செய்யும்போது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 22(1)-ன்படி கடைபிடிக்க வேண்டிய கட்டாய வழிமுறைகள் என்ன என்பது குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.
இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை தமிழக டிஜிபி வரும் நவ.10-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்” இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து, விசாரணையை தள்ளிவைத்தார்.