

சென்னை: டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகளில் தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து,அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாதுகாப்பற்ற பணிச் சூழலால் ஆயிரக்கணக்கான டாஸ்மாக் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முறையிட்டும், போராடியும் வருகின்றனர்.
சில்லறை மதுபான விற்பனையின் மூலம் டாஸ்மாக் நிறுவனம், தமிழக அரசுக்கு வரி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்களிப்பு வழங்குகிறது. இந்நிலையில், ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி) கடந்த ஆண்டு பிப்.11 முதல் தொடர்ந்து போராடுகிறது.
இக்கால கட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், அரசின் கூடுதல் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களிடம் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படாத நிலையில் இன்று (3-ம் தேதி) முதல் காலவரையற்ற காத்திருப்பு இயக்கத்தை அறிவித்துள்ளனர். வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நீண்டகால பணித் தொடர்ச்சியுடன் பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களின் பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் மிக, மிக நியாயமானவை என்பதை தமிழக முதல்வரின் கவனத்துக்கு தெரிவித்து, டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகள் மீது நேரடியாக தலையிட்டு நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.