

சென்னை: மாநகராட்சி சார்பில் கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் பயோ மைனிங் முறையில் இதுவரை 52 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டன.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரில் 1 முதல் 8-வது மண்டலம் வரை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்திலும், 9 முதல் 15-வது மண்டலம் வரை பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகத்திலும் திடக்கழிவுகள் பல்லாண்டு காலமாக கொட்டப்பட்டு வந்தன.
மாநகராட்சி விரிவாக்கம், மக்கள்தொகை அதிகரிப்பு, வணிக செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் ஆகிய 2 வளாகங்களிலும் குப்பைகள் கொட்டுவது அதிகரித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் நிலை உருவானது.
இதைத் தொடர்ந்து, பெருங்குடியிலும், கொடுங்கையூரிலும் உள்ள திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
பெருங்குடியில் 250 ஏக்கர் பரப்பு கொண்ட வளாகத்தில், 225 ஏக்கரில் 27.50 லட்சம் டன் திடக்கழிவுகளை பயோமைனிங் முறையில் அகற்றி நிலத்தை மீட்டெடுக்க ரூ.350.65 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை, 26.14 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு, 94 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதர திடக்கழிவுகளை பயோ மைனிங் முறையில் வரும் மார்ச் மாதத்துக்குள் அகற்றப்பட உள்ளது.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் 333 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 252 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
அங்கு ரூ.641 கோடியில் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுக்கும் பணி 2024-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.
அகற்றப்பட வேண்டிய 66.52 லட்சம் டன் திடக்கழிவுகளில் இதுவரை 26.50 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு, சுமார் 6 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
மீட்டெடுக்கப்பட்ட இந்த நிலத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பில் மாநகராட்சி சார்பில் ரூ.57 லட்சத்தில் சுற்றுவேலி அமைத்து குழாய் மூலம் நீர்ப்பாசன வசதியுடன் சுமார் 1,500 பசுமை மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறாக, பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் இதுவரை மொத்தம் 52.64 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.