“முதல்வர் விஜய்யின் சர்க்காரியா கமிஷன் பற்றிய பேச்சு திசைதிருப்பும் தந்திரம்” - பெ.சண்முகம் கண்டனம்

தவெக கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது என அறிவிப்பு
பெ.சண்முகம் | கோப்புப் படம்

பெ.சண்முகம் | கோப்புப் படம்

Updated on
2 min read

சென்னை: “முதல்வர் விஜய் 3 கோப்புகள் கையில் இருக்கிறது என்று கூறுகிறார். அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுவது திசைதிருப்பும் தந்திரம்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு மாநிலச் செயலர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “தவெக தலைமையில் கூட்டணி மற்றும் அதற்கான செயல்திட்டம் உருவாக்குவது, இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மக்களவை தேர்தல் கூட்டணி பற்றி ஆலோசிக்க நாளை (செப். 9) நடைபெறும் தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைச்சர்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், தவெக கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது.

தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தொடரும். தமிழக மக்களின் நலன் கருதி, உழைப்பாளர்களின் நலன் கருதி அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவோம். ஏற்பதும் நிராகரிப்பதும் அவர்கள் விருப்பம்.

சட்டமன்றம் என்பது சண்டை மன்றமாக இருக்கிறது. அவை முறையாக நடப்பதில் ஆளும்கட்சியைப் போல் எதிர்க்கட்சிக்கும் பொறுப்பு இருக்கிறது என்றாலும் ஆளும் கட்சிக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. மக்களுடைய வரிப்பணத்தில் சட்டப்பேரவை நடக்கிறது. அதை விரயம் செய்யக்கூடாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சிகள் பேரவையில் கேட்ட கேள்விகளில் ஒரு கேள்விக்காவது முதல்வர் பதில் சொன்னாரா?. அவர் முறையாக பதில் சொல்லவைல்லை. இதுவரை இதுபோன்று நடக்கவில்லை. பேரவையில் நினைத்ததை எல்லாம் முதல்வர் பேசுகிறார். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களைவிட இங்கு ஊழலை எதிர்த்து போராடிய வேறு கட்சியை சொல்லுங்கள் பார்க்கலாம்.

இஸ்மாயில் கமிஷன் அறிக்கையில் மிசாவில் கைதானவர்கள் சிறையில் பட்ட கஷ்டங்கள், வன்கொடுமைகள் பற்றி இருக்கிறது. தவெக அமைச்சர்கள் முதலில் ‘மிசா’ பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும். மிசா கொடுமைகள் தொடர்பாக நிறைய ஆவணங்களும் இருக்கின்றன. மேலும், மிசாவில் கைதானவர்கள் சமூக விரோதிகள் என்று நிர்மல் குமார் பேசியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. அதேபோல் சர்க்காரியா கமிஷனில் யார் மீதும் வழக்கு போடவில்லை.

தவெக அரசுக்கு ஆதரவு என்பது அவர்கள் நிலைப்பாட்டைப் பொருத்ததே.

முதல்வர் 3 கோப்புகள் கையில் இருக்கிறது எனக் கூறுகிறார். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? அதைவிடுத்து 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சர்க்காரியா கமிஷன் பற்றி ஏன் பேசுகிறார். இது திசைதிருப்பும் தந்திரம்” என்று பெ.சண்முகம் கடுமையாக விமர்சித்தார்.

முன்னதாக நேற்று, பெ.சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்யின் உருவக் கேலி உடல்மொழியை வன்மையாகக் கண்டித்திருந்தார்.

அந்த எக்ஸ் பதிவில், “மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. ஒன்றிய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில் அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல.

முதலமைச்சர் ஆக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் சிறையில் அடைக்கப்பட்டதும் பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். பினராயி விஜயன் மீது தங்கக் கடத்தல் வழக்கு பதியும் அளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாக அமலாக்கத் துறை நடந்து கொண்டிருப்பதை விவரம் அறிந்த அனைவரும் அறிவோம். எனவே அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமானது அல்ல.

அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு.

ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.

சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும்.

கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, அதுவும் கூட நாகரீகமாக சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது. ஆனால் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது, அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது.” என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>பெ.சண்முகம் | கோப்புப் படம்</p></div>
கர்நாடகா, தமிழகத்தின் ‘மெனோபாஸ்’ பாலிஸிகள் ஏன் மிக முக்கியமானவை? - ஒரு பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in