“என்னைப் பற்றி பேரவையில் முதல்வர் பேசியது உண்மைக்கு மாறானவை” - திமுக முன்னாள் எம்எல்ஏ கருணாநிதி

“என்னைப் பற்றி பேரவையில் முதல்வர் பேசியது உண்மைக்கு மாறானவை” - திமுக முன்னாள் எம்எல்ஏ கருணாநிதி
Updated on
2 min read

சென்னை: “எனது மகன் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, என்னை தொடர்புபடுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உண்மைக்கு மாறாக பேசியிருக்கிறார்” என திமுக முன்னாள் எம்எல்ஏ இ.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நான் கடந்த 2016 முதல் 2026-ம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகள் பல்லாவரம் சட்டமன்ற திமுக உறுப்பினராக பணியாற்றியுள்ளேன். கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் கட்சிப் பணியாற்றி வருகிறேன்.

எனது மூத்த மகன் ஆண்டோ மதிவாணன் எனது விருப்பத்துக்கு மாறாக பெசன்ட் நகரை சேர்ந்த அந்தோணியின் இரண்டாவது மகள் மெர்லினா அன் என்பவரை காதலித்து வந்தார். அதன் பிறகு 20.01.2017 அன்று திருமணம் செய்து வைத்தேன்.

திருமணத்துக்குப் பிறகு என் மகனும் மருமகளும் திருவான்மியூரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்கள். அந்த வீட்டுக்கு நான் நிகழ்ச்சிக்காக இரண்டு முறை மட்டுமே சென்று வந்தேன். மற்றபடி அவர்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இந்த நிலையில், அந்த வீட்டில் பணி செய்த ரேகா என்ற பணிப்பெண்ணை மெர்லினா துன்புறுத்தியதாக 16-01-2024 அன்று நான் தொலைக்காட்சியில் பார்த்து அறிந்தேன்.

அடுத்த நாள் 17-01-2024 அன்று திருவான்மியூர் காவல் நிலைய அதிகாரிகள் இருவர் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சென்று வாக்குமூலம் பெற்று, 18-01-2024-ல் முதல் தகவல் அறிக்கை எண் 15/2024 பதியப்பட்டது.

இந்த உண்மையை மறைத்துவிட்டு சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், கடந்த 18.01.2024 அன்று சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வந்த பிறகுதான் 20.01.2024 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகவும், அதிலிருந்து ஐந்து நாட்கள் கழித்து 26-01-2026 அன்றுதான் கைது செய்யப்பட்டதாகவும் உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்திருக்கிறார்.

18.01.2024 அன்று காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். 24.01.2024 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி, மாவட்ட நீதிமன்றத்தில் 7 நாட்களுக்குள் சரணடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ள உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

நீதிமன்ற உத்தரவு இருந்த பொழுதும் 25.01.2026 அன்று பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகில் காவல் துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்த தகவலை எல்லாம் மறைத்து உண்மைக்கு மாறான தகவலை முதல்வர் சட்டப்பேரவையில் பதிவு செய்திருக்கிறார்.

எனக்கும் மெர்லினா அன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. மெர்லினா அன்னும், சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரனின் மருமகளுமான மார்சியா அன்னும் உடன்பிறந்த சகோதரிகள். அதனால் சபாநாயகர் குடும்பத்தில் மெர்லினா அன் நெருக்கமாக உள்ளார்.

லாட்டரி மார்ட்டினின் மனைவியும் அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினருமான லீமா ரோஸின் உறவினர் என்று சொல்லி, அவருடைய உதவியாளர் போல் தற்பொழுது மெர்லினா அன் வலம் வந்து கொண்டிருக்கின்றார். இதனை அவருடைய சமூக வலைத்தளங்களில் மற்றவர்கள் பார்க்கும் விதத்தில் பதிவிட்டு வருகிறார்.

உண்மை நிலை இப்படி இருக்க சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், இது சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ள போது என்னை தொடர்புபடுத்தி உண்மைக்கு மாறாக பேசியிருக்கிறார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததும் அதைத் தொடர்ந்து துரிதமாக கைது செய்ததும் எவ்வித தாமதமும் இன்றி திமுக ஆட்சியில் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டதும் உண்மை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“என்னைப் பற்றி பேரவையில் முதல்வர் பேசியது உண்மைக்கு மாறானவை” - திமுக முன்னாள் எம்எல்ஏ கருணாநிதி
“மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை” - பேரவையில் நிர்மல் குமார் பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in