

சென்னை: “ஆதாரமில்லாமல் மூடப்பட்ட சர்க்காரியா கமிஷன் பற்றி பேசி ரீல்ஸ் போடுவதற்காகவே முதல்வர் விஜய் நேற்று அவ்வாறு பேசியுள்ளார். சபாநாயகர் முன்பு நடுநிலை போல இருந்தார். இப்போது சர்வாதிகார போக்கை கடைப்பிடிக்கிறார்” என திமுகவின் கொறடா எ.வ.வேலு பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் சர்காரியா கமிஷன் அறிக்கை, மிசா விவகாரம் பற்றிய முதல்வரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுகவினர் இன்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், முதல்வர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை என சபாநாயகர் அறிவித்தார். இதனையடுத்து, திமுகவினர் தொடர்ந்து அவையில் அமர்ந்து கோஷமிட்டனர். எனவே, அவையிலிருந்து திமுகவினரை வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவைக் காவலர்கள் திமுகவினரை வெளியேற்றினர்.
இதனையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, “ எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மானியக் கோரிக்கை விவாதங்களில் சட்டப்பேரவையில் பேசும் போது காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தவெக ஆட்சி அமைந்த பின்னர் 550 குற்றங்கள் நடந்துள்ளது. அதில் 200 கொலைகள், 300க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள், 10 ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கெல்லாம் முதல்வர் விஜய் நேற்று சட்டப்பேரவையில் பதில் சொல்வார் என எதிர்பார்த்தோம். முதல்வர் 27 நிமிடங்கள் பேசும் வரை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தோம். சட்டப்பேரவை விதி 92ன் படி நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கைப் பற்றி பேரவையில் விவாதிக்கக்கூடாது. அப்படி இருக்கையில், திட்டமிட்டு முதல்வர் அமலாக்கத் துறை அறிக்கை குறித்து பேசினார். சட்டப்படி அப்படி பேசக் கூடாது.
அதன்பின்னர் மிசா பற்றி பேசினார். அப்போது, அவர் நடிகர் என்பதால் அவருக்கே உரிய பாடி லாங்குவேஜ் எல்லாம் செய்தார். மிசா காலத்தில் யாரும் பேசக்கூடாது, எழுதக் கூடாது என ஜனநாயக கொடுமைகள் இருந்தன. அப்போது ஸ்டாலின் மிசா கொடுமைகளை அனுபவித்தார். ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக முதல்வர் விஜய் உடல்மொழியை செய்தார்.
சர்க்காரியா கமிஷன் பற்றி இந்த அவையில் பல முறை விவாதிக்கப்பட்டு, அதற்கு கருணாநிதியே பதில் சொல்லியுள்ளார். கருணாநிதி, முரசொலி மாறன் ஆகியோரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வார்த்தைகளை முதல்வர் விஜய் நேற்று பயன்படுத்தியுள்ளார் . சர்க்காரியா கமிஷன் விசாரணைக்கு சென்ற எம்ஜிஆர், இந்த புகார்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சேலத்து வழக்கறிஞர் கண்ணன் என்னிடத்தில் கொடுத்து கொடுக்கச் சொன்னார், நான் புகார் கொடுத்தேன் என்று சொன்னார்.
சர்க்காரியா கமிஷனிடம் 28 குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது, அந்த கமிஷன் நிறைவடையும் போது இக்குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை எனச் சொல்லப்பட்டது. சர்க்காரியா கமிஷனிடம் ஆதாரம் இருந்திருந்தால், அது நீதிமன்றம் சென்றிருக்கும். ஆனால் ஆதாரம் ஒன்றும் இல்லை.
நாங்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் விஜய் பதில் சொல்லவில்லை. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டப்பாக்குக்கு பதில் சொல்லியுள்ளார் முதல்வர். இப்போது குற்றம் சொல்கிறார், ஆனால், முரசொலி மாறனுக்கு சுற்றுச்சூழல் ஸ்டாம்ப் வெளியிட தயாநிதி மாறனுடன், அப்போது விஜய்யும் சென்றது ஏன்?.
விதிக்கு புறம்பாக அமலாக்கத் துறை விசாரணையில் உள்ள வழக்கு பற்றி முதல்வர் பேசினார், அது தவறு. மிசா ஜனநாயக போராட்டத்தை கொச்சைப்படுத்தும் உடல்மொழியை காட்டுவது தவறு. குற்றச்சாட்டுகளை நிரூபிக்காத சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியது தவறு. எனவே இவற்றை நீக்க வேண்டும் என்று இன்று பேரவையில் நாங்கள் கோரிக்கை வைத்தோம். அவர் மறுத்துவிட்டார்.
நாங்கள் ரியல் ஆட்சி நடத்தினோம், இப்போது ரீல்ஸ் ஆட்சி நடத்துகிறார்கள். நேற்று முதல்வரின் பேச்சை ரீல்ஸாக போடுகிறார்கள். நேற்று முன் தினம் சத்தியபாமா மாற்று சபாநாயகராக அமர்ந்தார், பெண்கள் மாற்று சபாநாயகர் ஆவது இதுவே முதன்முறை என்று ரீல்ஸ் போட்டார்கள். ஆனால் ஏற்கெனவே காங்கிரஸை சேர்ந்த பொன்னாம்மாள் அமர்ந்துள்ளார். யசோதா, லீமா ரோஸ் ஆகியோரும் மாற்று சபாநாயகராக இருந்துள்ளார்கள்.
ஆதாரமில்லாமல் மூடப்பட்ட சர்க்காரியா கமிஷன் பற்றி பேசி ரீல்ஸ் போடுவதற்காகவே முதல்வர் விஜய் நேற்று அவ்வாறு பேசியுள்ளார். சபாநாயகர் முன்பு நடுநிலை போல இருந்தார். இப்போது சர்வாதிகார போக்கை கடைப்பிடிக்கிறார்” என்றார்