

பிரதிநிதித்துவப் படம்
புதுச்சேரி: சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்துகளைக் குறைக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதுச்சேரி போக்குவரத்து காவல் துறையினர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக தீவிர அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சாலை பயனாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணிகளாக விளங்கும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகம் மற்றும் அஜாக்கிரதையாகவும், ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டுதல், சிவப்பு விளக்கை மீறுதல், தவறான திசையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் சிறார்களை இருசக்கர வாகனங்களை ஓட்ட அனுமதித்தல் போன்ற விதிமீறல்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், புதுச்சேரியில் உள்ள முக்கிய சந்திப்புகள், பிரதான சாலைகள், விபத்து அதிகம் நடைபெறும் பகுதிகள் மற்றும் பிற அபாயகரமான சாலைப் பகுதிகளில் சிறப்பு வாகனத் தணிக்கை மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதை மேம்படுத்துதல், மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்தல் மற்றும் வாகன ஓட்டிகள், இதர சாலைப் பயனாளர்களிடையே போக்குவரத்து ஒழுங்கு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், புதுச்சேரியில் முக்கியமான பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 13,884 நபர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துதல் - 2,331, சிறார்கள் வாகனம் ஓட்டுதல் - 174, அதிவேகம் - அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் - 214, தவறான திசையில் வாகனம் ஓட்டுதல் - 2,649, சிவப்பு விளக்கை மீறுதல் - 1,323, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் -171, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் - 4.137, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் - 748, ஏர் ஹாரன் பயன்படுத்துதல்-55, மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் - 3, அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல் - 6 மற்றும் இதர குற்றங்கள் - 2,073 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறார்கள் வாகனம் ஓட்டிய சம்பவங்களில், சம்பந்தப்பட்ட பெற்றோர் - பாதுகாவலர்கள் போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன், சிறார்களை மோட்டார் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கக் கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். தேவையான இடங்களில் உரிய சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
சிறார்களை வாகனங்கள் ஓட்ட அனுமதித்த பெற்றோர்கள் மீது 2 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நிர்ணயிக்கப்பட்ட நுழைவு நேரக் கட்டுப்பாடுகளை மீறி இயக்கப்பட்ட கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் மீது 3 முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து சீராக நடைபெறவும், நெரிசலைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இதுபோன்ற கடுமையான அமலாக்க நடவடிக்கைகளும், விதிமீறல்களுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான அமலாக்க நடவடிக்கைகளும் சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் சிறார்களை மோட்டார் வாகனங்களை ஓட்ட அனுமதித்தல் ஆகியவை தொடர்ந்து கடுமையாகக் கையாளப்படும். இதுபோன்ற விதிமீறல்கள் கடுமையான சாலை விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும் என்பதால், அவற்றின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாகக் கடைப்பிடித்து, போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போக்குவரத்து சீனியர் எஸ்பி திவ்யா தெரிவித்துள்ளார்.