

பட்டமளிப்பு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்
விழுப்புரம்: “தமிழகத்தில் பிறந்து, வளர்ந்து தமிழ் தெரியாது என்று சொல்வது போன்ற அவமானம் வேறு ஏதும் இல்லை. தமிழ் மொழி எல்லோரையும் வாழ வைக்கும். தமிழ் மொழி எந்த நேரத்திலும் உங்களை வீழ்த்தாது” என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் 2-வது பட்டமளிப்பு விழா இன்று (செப்.5) நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கிருஷ்ணலீலா வரவேற்றார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியது: “ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வழக்கறிஞர் என்ற கம்பீரமான தொழிலுக்குள் அதிகாரபூர்வமாக கால் பதிக்கும் தகுதியூட்டும் நாள் இது. உங்கள் வாழ்க்கை பாதையில் ஏதோ ஒரு வகையில் உதவி புரிந்தவர்களுக்கும், நல் உள்ளங்களுக்கும் இந்த நாளை காணிக்கையாக்க வேண்டும் என விரும்புகிறேன். நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், வெற்றி என நினைக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.
வாழ்க்கையில் நன்றி விசுவாசத்துடன் இருப்பது முக்கியம். மற்றவர் உதவி இல்லாமல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. உலகத்துக்குள் வரும்போதும், உலகத்தைவிட்டு செல்லும்போது என இரண்டு இடங்களில் மட்டும் மனிதன் தனியாக இருக்கின்றான். இடைப்பட்ட காலத்தில் மனிதன் எதனை அடைய வேண்டும் என்றாலும், மற்றவர்கள் துணை இல்லாமல் அடைய முடியாது.
கூர்மையான அறிவுடன் பிறப்பவர், சராசரி அறிவுடன் மெதுவாக கற்றுக் கொள்பவர் என மனிதர்கள் இரண்டு வகைப்படுவர். சட்டத் துறை மட்டும் இல்லை, எந்த துறையிலும் இந்த இரு தரப்பினரும் உயர்ந்த இடத்தை தொட முடியும். இதற்கு சாட்சியாக, சராசரி அறிவுள்ள நான், உங்கள் முன்னாள் நின்றிகின்றேன். சராசரியாக இருப்பவர்களுக்கு கூடுதல் உழைப்பு தேவைப்படும். கூர்மையான அறிவு உள்ளவர் ஒரு முறை படித்து தெரிந்து கொள்வதை, சராசரியாக இருப்பவர் 3 முறை படிக்க வேண்டும். இவ்வாறு படிக்கும்போது, அவருடைய நிலைக்கு நாமும் வந்துவிடுகிறோம். கடின உழைப்பு, விடா முயற்சி தேவை என்பதற்காக சொல்கிறேன்.
இலக்கு என்ன, பாதை என்ன என்பதை தேர்தெடுக்காத வரை குழப்பம் இருக்கும். பாதையை வகுப்பதுதான் பெரிய சவால். மனதார நேசிக்கும் இலக்கை நோக்கி மெதுவாக செல்ல வேண்டும். குறுக்கு வழியில் செல்லாமல் பயணிக்க வேண்டும். குறுக்கு வழியில் சென்று வெற்றியை கண்ட பலர், ஒரு நிலைக்கு பிறகு வாழக்கை என்பது அவர்களை பாழாய்ப்படுத்தி இருக்கிறது. குறுக்கு வழியில் வந்தவர் மட்டும் இல்லை, அவரது குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்படுவதை நாங்கள் பார்த்து உள்ளோம்.
குறுக்கு வழி என்ற எண்ணத்தை மனதில் இருந்து தூக்கி எறியுங்கள். செய்யும் தொழிலை காதலுடனும், பொறுமையுடன் செய்ய வேண்டும். நற்பண்புகளை கடைபிடித்தால் வாழ்க்கையில் தோல்விக்கு வாய்ப்பு இல்லை.
ஜீனியஸ் என்றாலும் கடின உழைப்பு, விடா முயற்சியை 85 வயது வரை நீட்டித்துக் கொண்டே இருக்கிறார் இளையராஜா. அவர், புதிய இசை நுட்பங்களை, கற்றுக் கொண்டு செயல்படுகிறார்.
சமூக வலைதளங்களால் நமது நேரத்தை இழக்கிறோம். புத்தகங்களை வாசிக்கும்போது, பக்கத்தை திருப்புவதன்மூலம் இடைவெளி வருகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் இடைவெளி இல்லை. என்று நான் இசை அமைப்பது நின்று விடுகிறதோ, அன்று எனது மூச்சு நின்றுவிடும் என்கிறார் இளையராஜா. எனக்கு சட்டம் உயிர், பாட்டு பைத்தியம், விளையாட்டு, உடல் ஆரோக்கியம் எனக்கு மிகவும் பிடிக்கும். எழுதுவதும், மாணவர்களின் முகத்தை பார்த்து பேசுவதும் பிடிக்கும். இவை எல்லாம் பிடிக்கிறதால், நேரம் என்னுடன் இருக்கிறது. நேரமின்மை என்பது பிடிக்காமல் செய்யும் செயலால் ஏற்படுகிறது. பிடித்து ஒரு தொழிலை எடுத்து நடத்தினால் எந்த விதமான தடை கல்லையும் அசாதாரணமாக தாண்டி விட முடியும்.
எத்தனை பேர் தினசரி உடற்பயிற்சி, நடை பயிற்சி, விளையாட்டில் ஈடுபடுத்திக் கொள்கிறீர்கள்? சமூக ஊடகங்களை தாண்டி புத்தகங்களை வாசிப்பதிலும், இலக்கிய உலகிலும் ஆர்வம் காட்டுகிறீர்கள்? எத்தனை பேருக்கு பாடுவது, ஆடுவது, வரைவது என ஈடுபாடு உள்ளீர்கள்? திரை உலகம், சமூக வலைதளத்தில் மூழ்கிவிடாமல் மனிதர்களுடன் ஆழமான உறவுகளை வளர்த்துக் கொள்ள எத்தனை பேர் ஆசைப்படுகிறீர்கள்? இந்தக் கேள்விகளுக்கான விடையை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
முதல் மூன்று கேள்விகளை விட 4-வது கேள்வி மிக முக்கியம். ஸ்கிரீன் உள்ளே இருக்கும் ஒருவர் கூட நம்முடன் வர மாட்டார்கள். அருகில் நம்முடன் இருக்கும் உறவுகள்தான் வரும். சட்டப் புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு நீதிமன்றத்தின் உள்ளே வாழும் இயந்திரங்களாக நீங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக கேட்கிறேன். அப்புறம் உங்களுக்கும், செல்போனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நாமும் ஜடமாகிவிடும். நம்முடன் மிகப் பெரிய ஆன்மா இருப்பதால் ஜட பொருளாகிவிடக் கூடாது.
நான், வாரத்தில் 6 நாள் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்றுவிடுவேன். நீதிபதியாக இல்லை என்றால் உடற்பயிற்சி கூட பயிற்றுநராக இருந்திருப்பேன். நான் எதை கடைபிடிக்கிறேனோ, அதனை உங்களிடம் சொல்லி இருக்கிறேன்.
தாய்மொழிப் பற்று முக்கியம். தமிழனாக பிறந்ததற்கு பெருமைப்பட வேண்டும். ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்ற பாரதி சொல்லியதை மேடையில் பேசுவதால் பயன் இல்லை. எனக்கு மொழி வெறி உண்டு. நம்முடைய தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி. வளமான தமிழ்மொழியை, தாய் மொழியாக பெற்றிருப்பதற்கு, ஒவ்வொரு நொடியும் நாம் பெருமைப்பட வேண்டும்.
நாம் பிறந்து, வளர்ந்து, வாழும் நமது தமிழ் கலாச்சாரம், உலகில் ஓர் உன்னதமான கலாச்சாரம். நமது கலாச்சாரத்தின் மீதும், மொழி மீதும் அசைக்க முடியாத பற்று இருக்க வேண்டும். தமிழ் மொழியை நெஞ்சார நேசியுங்கள், பெருமையோடு வெளிப்படுத்துங்கள். எனக்கு தமிழ் பிடிக்கும் என ரகசியமாக சொல்லக் கூடாது. தமிழை எட்டாவது வரை படித்துள்ளேன் எனச் சொல்வது கலாச்சாரமாகிவிட்டது.
தமிழ் தெரியாது என்று தமிழ்நாட்டில் சொல்வது போன்ற அவமானம் வேறு ஏதும் இல்லை. தமிழ் மொழி எல்லோரையும் வாழ வைக்கும். தமிழ் மொழி எந்த நேரத்திலும் உங்களை வீழ்த்தாது. தமிழ் மொழியை நம்பினால் வாழ்க்கையில் சிறந்து விளங்க முடியும். பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். போய் வாருங்கள், நேர்மையின் வழி நின்று நல்ல பெயரை பெற்றிடுங்கள்” என்று அவர் பேசினார்.