

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த ராசம்மாள் (65) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து உரிமையாளர் மற்றும் போர்மேன் மீது மாரனேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி அருகே நதிக்குடி கிராமத்தில் பெசோ உரிமம் பெற்று இயங்கி வரும் ஶ்ரீ குருலட்சுமி பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 அறைகள் தரைமட்டமான நிலையில், 10 அறைகள் சேதமடைந்தன. விபத்து ஏற்பட்ட உடன் தொழிலாளர்கள் தப்பி ஓடிய நிலையில், சிலோன் காலனியை சேர்ந்த ராசம்மாள் (65) என்ற தொழிலாளி காயமடைந்தார்.
80 சதவீதம் காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவனையில் முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி ராசம்மாள் உயிரிழந்தார்.
விபத்து குறித்து பட்டாசு ஆலை உரிமையாளரான சுப்பிரமணி மகன் கருப்பசாமி மற்றும் போர்மேன் மீது மாரனேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.