“ஆளுநருக்கு திட்டங்களை ஆய்வு செய்யும் அதிகாரம் இல்லை” - அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்

அமைச்சர் சிடிஆர்.நிர்மல் குமார்

அமைச்சர் சிடிஆர்.நிர்மல் குமார்

படங்கள்: நா.தங்கரத்தினம்

Updated on
3 min read

மதுரை: “எந்த அதிகாரமும் இல்லாத ஆளுநர் எந்த திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமை இல்லை. அதை தவெக அரசு என்றைக்கும் அனுமதிக்காது,” என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கடும் கண்டனங்களை பதிவு செய்தார்.

முன்னதாக, நேற்று மதுரை சென்ற ஆளுநர் அர்லேகர் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரை அழைத்து அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், “எந்த அதிகாரமும் இல்லாத ஆளுநர் எந்த திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமை இல்லை. அதை தவெக அரசு என்றைக்கும் அனுமதிக்காது,” என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மதுரையில் கடும் கண்டனங்களை பதிவு செய்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், உயர் கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவரும் எம்பியுமான சு.வெங்கடேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், “இக்கூட்டத்தில் மத்திய, மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தும் முறைகள், பிரச்சினைகள், துறைகளிடையே ஒருங்கிணைப்பு குறித்தும் விவாதிக்க உள்ளோம். மக்களுக்கு விரைவாக திட்டங்களை கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அதில் துறைகளுக்கு இடையேயுள்ள பிரச்சினைகளை இடையூறுகளை சரி செய்துவிட்டு ஒவ்வோர் ஆண்டுக்கான இலக்குகளையும் முடிக்க வேண்டும். மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் அவர்களது அதிகாரத்துக்கு உட்பட்டு ஆய்வு செய்யலாம். எந்த அதிகாரமும் இல்லாத ஆளுநர், எந்த திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமை இல்லை. அதை இந்த அரசு என்றைக்கும் அனுமதிக்காது. தேவையில்லாமல் ஆளுநர், அரசின் நிர்வாகத்தில் தலையிட்டால் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்படும்.

கண்டிப்பாக எந்த அதிகாரிகளும் அரசின் அனுமதி பெறாமல் ஆளுநருக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என்பதை அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் தேவையில்லாமல் ஆய்வு செய்யக் கூடாது. அவ்வாறாக தலையிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது.” என்று கூறினார்.

முன்னதாக, இக்கூட்டத்தை தொடங்கி வைத்து சு.வெங்கடேசன் எம்.பி பேசியது: “இக்கூட்டத்தின் நோக்கம் மிக உயரியது. மத்திய, மாநில அரசு மற்றும் கிராம பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு அரசியல் சாசனம் தனித்தனி உரிமைகள் கொடுத்துள்ளது. இந்த உரிமைகள் ஒன்றோடொன்று முரண்பட்டு திட்டங்கள், பயனாளிகள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. அதற்காக மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கும் கிராம பஞ்சாயத்து உரிமைகளுக்கு இடையில் எந்த முரணும் ஏற்படாமல் நிர்வாகத்தை சிறப்பாக கொண்டுசெல்வதன் அடிப்படைதான் இந்தக் கூட்டம், இந்தச் சட்டம்.

குறிப்பாக சொல்வதென்றால் மத்திய அரசின் 39 அமைச்சகங்களுக்கு கீழே வருகிற 96 திட்டங்களை ஆய்வு செய்வதற்கான அரசியல் சட்டம் வழங்கியிருக்கின்ற அமைப்பு ‘திசா’. இது மிக உயரிய அமைப்பு. இது அரசியல் மேடையல்ல. மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். துறைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு முறையாக இருக்க வேண்டும். ஆனால் அதுதான் பிரச்சினையாக இருக்கிறது.

ஒரு துறை மட்டும் தனித்து செயல்பட முடியாது. பல துறைகளின் உடன்பாடோடுதான் ஒரு திட்டம் செயல்படுத்த முடியும். எனவே துறைகளுக்காக ஒருங்கிணைப்பு மிக முக்கியம். அந்த அடிப்படையில் இங்கே கொடுக்கப்படுகிற உத்தரவுகள் சிறப்பாக செய்யப்பட வேண்டும். அப்படி செய்வதன் மூலம் மதுரை மாவட்டத்தின் திசா கூட்டம் என்பது கடந்த காலங்களில் பல மாவட்டங்களை ஒப்பிடும்போது மிகச் சிறப்பாக ஆக்கப்பூர்வமாக பணி செய்திருக்கிறோம். இந்தப் பணி தொடர வேண்டும்.

2-வது மிக முக்கியமான விஷயம். நேற்றைய தினம் மதுரைக்கு வந்த தமிழக ஆளுநர் சில குறிப்பிட்ட மத்திய அரசின் திட்டங்கள் சார்ந்து ஒரு ஆய்வை நடத்தியதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. அதன் தொடர்ச்சியாக அப்படி ஆய்வு நடைபெறவில்லை, நாங்கள் மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்தோம் என்று மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது. நான் அதற்குள்ளே போக விரும்பவில்லை.

ஆனால், ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த கடமைப்பட்டு இருக்கிறேன். மத்திய அரசின் எந்தவொரு திட்டத்தையும் ஆய்வு செய்வதற்கான சட்ட உரிமை எங்களுக்கு (எம்பிக்கள்) மட்டும்தான் இருக்கிறது. அந்தச் சட்டம் வழங்கியிருக்கிற குழுவின் தலைவர் நான். இங்கே இருப்பவர்கள் குழு உறுப்பினர்கள்.

இந்த அரங்கத்தை தாண்டி வெளியில் ஒரு குறிப்பிட்ட மத்திய துறையின் அமைச்சர் அவரது துறையில் ஆய்வு செய்யலாம். ஆனால் பல துறைகளில் ஆய்வு நடத்துவதற்கு இந்திய அரசியல் சாசனம் எங்களுக்கு மட்டுமே உரிமை வழங்கியிருக்கிறது. எங்கள் உரிமையை வேறு யார் எடுக்க நினைத்தாலும் அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அதை இந்த நேரத்தில் தெளிவாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒருவேளை அப்படி யாராவது ஆய்வு நடத்த அதிகாரிகளை அழைத்தால் எந்த அதிகாரியும் பங்கெடுக்கக் கூடாது. அப்படி பங்கெடுத்தீர்கள் என்றால் அடுத்த ‘திசா’ கூட்டத்தில் உங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு அது குறித்து விளக்கம் கேட்கப்படும்.

எனவே, அரசியல் சாசனம் சட்டம் வழங்கியிருக்கிற அனைத்து துறைகளையும் ஆய்வு செய்கிற 39 அமைச்சகத்திற்கு கீழே வருகிற 96 துறைகளை ஆய்வு செய்கிற அமைப்பு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுதான். இது மதுரை மாவட்டத்தில் நூறு சதவீதம் உறுதிப்படுத்தப்படும் என்பதை அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக முன்னெடுக்கும் இந்த கூட்டம் அதன் மீதான விவாதங்கள் பயன்படும் எனச் சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் சிடிஆர்.நிர்மல் குமார்</p></div>
“ஆணவம் அழிவுக்கு வழி” - அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in