

சென்னை: திருச்சி கிழக்கு உட்பட காலியாக உள்ள 5 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை உடனே தொடங்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதுதவிர நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக உறுப்பினர்கள் எஸ்.ஜெயகுமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), பி.சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் சேர்ந்தனர்.
இதையடுத்து திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. பொதுவாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அதிலிருந்து 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தவேண்டும். அதன்படி 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை வரும் ஜூன் 22-ம் தேதிக்குள் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கக்கூடும். எனவே, அதற்கான அனைத்து ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் ஏற்கெனவே வெளியிட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். தேர்தல் நடைபெறும் தொகுதி மாநகராட்சி அல்லது நகராட்சி எல்லைக்குள் அமைந்திருந்தால், அந்த குறிப்பிட்ட தொகுதிக்குள் மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும். அதேநேரம் ஊரகப் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாக இருந்தால், அந்த மாவட்டம் முழுமைக்கும் தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தும்.
தங்கள் சொந்த தொகுதிகளில் பணிபுரியும் அதிகாரிகள் அல்லது கடந்த 4 ஆண்டுகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய அதிகாரிகள் உடனே மாற்றப்பட வேண்டும். இது வருவாய் துறை அலுவலர் மட்டுமின்றி, துணை ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்டோருக்கும் பொருந்தும். காவல்துறையில் துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும் அதற்கு இணையான களப் பணியாளர்களுக்கும் இந்த விதிமுறைகள் அமலாகும். மேலும், அடுத்த 6 மாதங்களில் ஓய்வுபெறவுள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு தரப்படுகிறது. குற்றப் பின்னணி அல்லது துறைரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ள அதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
அதேபோல், 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது பணியில் உள்ளனரா, அந்தத் தொகுதிகளின் பகுதிகள் வேறு மாவட்டங்களில் உள்ளனவா, மாநகராட்சி எல்லைக்குள் வருகிறதா போன்ற விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உடனே தெரிவிக்க வேண்டும்.
மேலும், இடைத்தேர்தலுக்கான தயாரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக தேர்தல் ஆணையம் வழங்கிய படிவங்கள் மூலம் தேவையான அனைத்து விவரங்களையும் ஜூன் 22-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.