“என்னுடைய தேர்தல் அறிக்கையை காப்பி அடித்த திமுக!” - ஆதாரம் இருப்பதாகச் சொல்கிறார் அர்ஜுனமூர்த்தி | நேர்காணல்

“என்னுடைய தேர்தல் அறிக்கையை காப்பி அடித்த திமுக!” - ஆதாரம் இருப்பதாகச் சொல்கிறார் அர்ஜுனமூர்த்தி | நேர்காணல்

Published on

பாஜக-வின் தேர்தல் அறிக்கை குழு உறுப்பினராக இருக்கும் இரா. அர்ஜுனமூர்த்தி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தின் இணை அமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். சமூக சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழக பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவின் மாநில அமைப்பாளராகவும் இருக்கும் அவரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.

Q

திமுக தனது ‘திராவிட மாடல்’ ஆட்சியையும், ‘ஸ்டாலின் 2.0’ என்ற புதிய முன்னெடுப்பையும் வலிமையாக முன்னிறுத்துவது பற்றி..?

A

தி​முக தன்னை ஒரு வலிமை​யான சக்​தி​யாகக் காட்​டிக் கொண்​டாலும், அவர்​களிடம் ‘தி​ரா​விட மாடல்’ என்ற ஒற்றை வெற்று முழக்​கத்​தைத் தவிர வேறு எது​வும் இல்​லை. முதல்​வர் ஸ்டா​லின் இப்​போது​தான் ‘2.0’ என்று பேசத் தொடங்​கி​யிருக்​கி​றார். இது முழுக்க முழுக்க பிரதமர் மோடி​யின் பாணி​யைப் பார்த்​துச் செய்​யப்​படும் ஒரு ‘காப்பி கேட்’ அரசி​யல்.

மோடி​யின் ஒவ்​வொரு செயல்​பாட்​டை​யும், வார்த்​தையை​யும் இரவல் வாங்கி செயல்​படும் ஒரு​வரை மக்​கள் எப்​படி திறன்​மிக்​கத் தலை​வ​ராக ஏற்​றுக் கொள்​வார்​கள்? திமுக வெறும் நுங்கு வண்​டியை ஓட்​டிக்​கொண்​டு, அது​தான் அதிவேக வாக​னம் என மக்​களை நம்ப வைக்​கத் துடிக்​கிறது.

Q

எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய மன நிறைவுடன் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறாரே?

A

ஒரு நிறு​வனத்​தில் வேலை செய்​பவர், “நான் மிகச் சிறப்​பாகப் பணி​யாற்​றுகிறேன்” என்று தம்​பட்​டம் அடித்​துக் கொள்​வது வெறும் மனோ​பாவம் சார்ந்த விஷ​யம் மட்​டுமே. அது ஒரு​போதும் அவரது திறமைக்​கான அத்​தாட்சி ஆகாது.

Q

‘ஆட்சியில் பங்கு’ என்ற முழக்கம் தமிழகத்தில் தற்போது சத்தமாக ஒலிப்பது பற்றி..?

A

இன்​றைய காலச் சுழற்​சி​யில் மக்​களுக்கு என்ன தேவையோ, அதை அனுசரித்​துச் செல்​வதற்கு அரசி​யல்​வா​தி​கள் தயா​ராகி விட்​டார்​கள். ஆட்​சி​யில் பங்கு என்​பது காலத்​தின் தேவை​யாக இருந்​தால், எல்லா அரசி​யல்​வா​தி​களும் அதற்கு ஒப்​புக்​கொண்டு செல்​வார்​கள். இது திமுக-வுக்​கும் பொருந்​தும் என்​டிஏ-வுக்​கும் பொருந்​தும்​.

Q

ரஜினிகாந்தின் “சிஸ்டம் சரி இல்லை, அதை மாற்ற வேண்டும்” என்ற கருத்தை இப்போது விஜய் கையில் எடுத்திருப்பதாக கருதுகிறீர்களா?

A

​விஜய் முதலில் சிஸ்​டத்தை பற்றி புரிந்​திருக்​கி​றா​ரா? ‘சிஸ்​டம் சரி​யில்​லை’ என்று ரஜினி​காந்த் சொன்​ன​போது, அதற்​குப் பின்​னால் நாற்​பது ஆண்​டு​கால அவருக்கு நெருக்​க​மான அரசி​யல் உணர்​வும், உறவும் இருந்​தது. விஜய்க்கு அரசி​யல் உறவு இருந்​திருந்​தால், அவரது அரசி​யல் உணர்​வு​கள் தூண்​டப்​பட்​டிருக்​கும். விஜய்க்கு இருப்​பது அரசி​யல் ஆர்​வம் மட்​டுமே. அது உணர்​வாக மாற காலம் எடுக்​கும்​.

Q

திமுக-வை தீய சக்தி என்றும் அதிமுக-வை ஊழல் சக்தி என்றும் சொல்கிறாரே விஜய்?

A

எந்தக் கதவில் முட்டினால் சீக்கிரம் திறக்குமோ அதை முட்டுவது தான் மனிதனின் இயல்பு. ஒரு பக்கம், தீய சக்தி என்ற கதவை விஜய் முட்டு​கி​றார். இன்னொரு பக்கம், ஊழல் சக்தி என்று மற்றொரு கதவை முட்டு​கி​றார். உண்மை​யில், எந்தக் கதவை திறந்து மக்களிடம் போகப் போகிறார் என்பதை விஜய் தான் தீர்மானிக்க வேண்டும். தமிழக அரசியல் நீண்ட​காலமாக ‘பகுத்​தறிவு’ என்ற ஒரு மாயைக்குள் சிக்கிக் கிடந்தது.

ஆனால், இன்று மக்கள் அந்தப் பழைய மாயைத் திரைகளைக் கிழித்​தெறிந்​து​விட்டு, ‘பொது அறிவு’ என்கிற தெளிவான தளத்துக்கு வந்து​விட்​டார்கள். இன்றைய இளைஞர்​களும் பொதுமக்​களும் வெறும் மேடைப் பேச்சுகளைக் கண்டு ஏமாறத் தயாராக இல்லை. அவர்களிடம் ‘வாய் ஜாலங்கள்’ இனி எடுபடாது.

Q

தேமுதிக-வையும் ராமதாஸையும் என்டிஏ-வுக்குள் கொண்டுவர ஏதேனும் முயற்சிகள் நடக்கிறதா?

A

தமிழக தேர்​தல் களம் திமுக-வுக்​கும் என்​டிஏ-வுக்​கும் இடையி​லான நேரடிப் போட்டி என்​பதை மக்​கள் எப்​போதோ முடிவு செய்து விட்​டார்​கள். என்​டிஏ பக்​கம் இணை​யும் கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கே லாப​மும் அதி​கம்; வெற்​றி​யும் அதி​கம். தங்​கள் கட்சி அதிக இடங்​களில் போட்​டி​யிட வேண்​டும், தங்​கள் தொண்​டர்​கள் அதிக அளவில் சட்​டப்​பேர​வைக்​குச் செல்ல வேண்​டும் என்று உண்​மை​யாகவே ஆசைப்​படும் எந்​தவொரு தலை​வ​ரும் இன்று என்​டிஏ-​வைத்​தான் ஆதரிப்​பார்​கள்​.

Q

ஆட்சியில் பங்கு என்று சொல்லி கூட்டணிக் கதவுகளை திறந்து வைத்த விஜய்யுடன் யாரும் கூட்டணி பேசவில்லையே..?

A

‘ஆழம் தெரியாமல் காலை விடாதே’ என்று ஒரு பழமொழி உண்டு. தற்போது எல்லோரும் ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Q

பாஜக-வின் தேர்தல் அறிக்கை எதை மையப்படுத்தி தயாராகிறது?

A

பாஜக தேர்தல் அறிக்கையானது விவசாயிகள், எதிர்காலத் தூண்களான ஜென்-ஸீ இளைஞர்கள் மற்றும் மகளிர் முன்னேற்றத்தை மையப்படுத்தியே தயாராகும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தபோது, நான் ஒரு சிறிய கட்சியைத் தொடங்கி மக்களுக்கான எனது பணிகளைத் தொடர்ந்தேன். அப்போது நான் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இருந்த பல முக்கிய அம்சங்களை திமுக அப்படியே காப்பி அடித்து தனது தேர்தல் அறிக்கையாக மாற்றியது. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

குறிப்பாக, இன்று திமுக அரசு மிகப்பெருமையாகப் பேசிக்கொள்ளும் ‘மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம்’ திட்டம், எனது தேர்தல் அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு ஐடியா. என்னுடைய சிந்தனையை இரவல் வாங்கித்தான், இன்று அவர்கள் ‘விடியல் பயணம்’ என்று பெயர் சூட்டி விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்.

Q

தமிழகத்தில் நிலவும் நான்கு முனை போட்டியால் வாக்குகள் பிரிவது யாருக்குச் சாதகமாகும்?

A

திமுக எப்போதுமே கூட்டணி பலத்தாலும் இலவசத் திட்டங்களாலுமே வெற்றியை தக்கவைத்துக் கொள்கிறது. ஆனால், இம்முறை நிலைமை வேறாக இருக்கிறது. திமுக வெற்றிக்கு காரணமாக இருக்கக் கூடிய 12 சதவீத புதிய வாக்காளர்கள், விஜய், சீமான் மற்றும் என்டிஏ கூட்டணி எனத் தங்களின் விருப்பங்களை மாற்றிக் கொள்ளத் தயாராகிவிட்டார்கள்.

தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய வாக்கு மாற்றத்தை இந்தத் தேர்தல் சந்திக்கப் போகிறது. இந்த வாக்குகள் பிரியும் போது, அது நேரடியாக திமுக-வின் வெற்றி வாய்ப்புகளைத்தான் பாதிக்கும். அதேசமயம் என்டிஏ வாக்குகள் சிதறாமல் கிடைக்கும். இது என்டிஏ-வுக்கு மிகப்பெரிய சாதகமாக அமையும்.

“என்னுடைய தேர்தல் அறிக்கையை காப்பி அடித்த திமுக!” - ஆதாரம் இருப்பதாகச் சொல்கிறார் அர்ஜுனமூர்த்தி | நேர்காணல்
“யதார்த்தம் உணர்ந்து சினிமாவுக்கே விஜய் திரும்புவார்!” - பாஜகவின் நயினார் பாலாஜி நேர்காணல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in