

பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில அமைப்பாளர் நயினார் பாலாஜி.
பாஜக-வின் அடிப்படைத் தொண்டனாக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி.
தற்போது பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில அமைப்பாளராக இருக்கும் அவர், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், அவர்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக அவரிடம் பேசியதிலிருந்து...
பாஜக-விலும் ‘வாரிசு அரசியல்’ என்ற விமர்சனம் எழுந்திருக்கிறதே..?
பாஜக-வில் நான் உழைப்பால் உயர்ந்தவன். பிரதமர் மோடி மீதான ஈர்ப்பால், எனது தந்தைக்கு முன்பாகவே 2014-ல் நான் கட்சியில் இணைந்துவிட்டேன். உண்மையில், என் தந்தையை விட நானே பாஜக-வில் சீனியர்.
தமிழக இளைஞர்களுக்காக உங்கள் பிரிவு என்ன செய்யப் போகிறது?
விளையாட்டின் மூலம் சமூக மாற்றத்தையும், வீட்டுக்கொரு விளையாட்டு வீரர் என்ற இலக்கையும் அடைவதே எங்களது முதன்மை நோக்கம். இதற்காக, பிரதமர் மோடி பெயரில் 1 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட போட்டிகளை நடத்தி, அத்துடன் வேலைவாய்ப்பு முகாம்களையும் ஒருங்கிணைத்து மத்திய அரசின் நலத்திட்டங்களைக் கொண்டு சேர்க்க இருக்கிறோம்.
விளையாட்டுத் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக உதயநிதி குற்றம் சாட்டுகிறாரே?
தமிழக விளையாட்டுத் துறைக்கு பிரதமர் மோடி ஒதுக்கிய நிதியை உதயநிதி ஸ்டாலின் முறையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டார். தனது இயலாமையை மறைக்கவே அவர் மத்திய அரசு மீது பழி போடுகிறார். மேலும், நேரு உள் விளையாட்டு அரங்கம் திமுக-வின் அரசியல் கூடாரமாக மாறி, சாதாரண வீரர்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது. விளையாட்டுத் துறையை அரசியலாக்குவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஆனால், விளையாட்டுத் துறையில் திராவிடக் கொள்கையை புகுத்தியதால் தமிழக விளையாட்டு துறை ஜொலித்துக் கொண்டிருப்பதாக உதயநிதி சொல்கிறாரே?
உண்மையில், திராவிடக் கொள்கைகளால் தகுதியுள்ள தமிழக விளையாட்டு வீரர்களின் எதிர்காலக் கனவுகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.
ஆனால், உதயநிதி விளையாட்டுத் துறைக்கு பொறுப்பேற்ற பிறகு தானே பல சர்வதேச போட்டிகள் தமிழகத்துக்கு வந்துள்ளது?
அவர் நடத்தக்கூடிய சர்வதேச போட்டிகள் அனைத்தும் வசதி படைத்தவர்களுக்காக மட்டுமே. இதனால் என்ன பயன்? அந்த போட்டிகளில் எத்தனை தமிழ் வீரர்கள் பங்கேற்றிருப்பார்கள். சர்வதேச போட்டிகள் நடத்துவது மட்டும் முக்கியமல்ல... அதில் தமிழ் இளைஞர்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.
இளைஞர்களின் வாக்கு வங்கியை பாஜக பக்கம் திருப்ப விளையாட்டுப் பிரிவை ஒரு கருவியாக பயன்படுத்துவீர்களா?
தளராத முயற்சியுடன் எங்கள் பிரிவு பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறது. வரும் தேர்தலில் தமிழக இளைஞர்களின் வாக்குகளை பாஜக பக்கம் திருப்பும் ஒரு வலிமையான கருவியாக எங்கள் பிரிவு நிச்சயம் இருக்கும்.
இளைஞர்களைக் கவர்வதில் விஜய்க்கும் உங்களுக்கும் இடையிலான போட்டி எப்படி இருக்கப் போகிறது?
விஜய்யின் பின்னால் கூடும் கூட்டம் வெறும் சினிமா மோகமே தவிர, அது வாக்குகளாக மாறாது. மக்கள் பணி ஏதுமின்றி, அவ்வப்போது வந்து வசனம் பேசுவது மட்டுமே அவரது அரசியலாக உள்ளது. தேர்தல் முடிவில் கள யதார்த்தத்தை உணர்ந்து விஜய் மீண்டும் சினிமாவுக்கே திரும்புவார்.
இந்த தேர்தலில் நீங்கள் களமிறங்குவீர்களா?
கட்சியில் இருந்து சீட் கொடுத்து தேர்தலில் போட்டியிடச் சொன்னால், நான் நின்று தான் ஆக வேண்டும். ஆனால், தற்போது தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசை எனக்குத் துளியும் இல்லை.