

கோப்புப் படம்
தூத்துக்குடி: கொச்சி- தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் அமைக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் இயற்கை எரிவாயுக்கு மாறுவதுடன், தென்மாவட்டங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் தடையின்றி இயற்கை எரிவாயு வழங்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் பெரு நகரங்களில் மட்டும் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) விநியோகம் செய்யும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கான பணிகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொச்சி முதல் தூத்துக்குடி வரை கன்னியாகுமரி வழியாக இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு (ஐஓசிஎல்) மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி வழங்கியுள்ளது.
கொச்சி- கன்னியாகுமரி- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டம் (கேடிபிஎல்) மூலம் கொச்சியில் அமைந்துள்ள திரவ இயற்கை எரிவாயு முனையத்தில் (எல்என்ஜி) இருந்து, தூத்துக்குடி வரை 425 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைக்கப்படுகிறது.
இந்த திட்டம், தினமும் 6.84 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் (எம்எம்எஸ்சிஎம்டி) இயற்கை எரிவாயு கொண்டு வரும் திறனுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை வடிவமைத்தல், செயல்படுத்துதல், விரிவாக்கம் செய்தல் ஆகியவற்றை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொள்ளும்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதியை தொடர்ந்து திட்டத்துக்கான விரிவான பொறியியல் ஆய்வுகள், வழித்தட ஆய்வுகள் போன்றவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்தடுத்த பணிகளின் சூழ்நிலைகளை பொறுத்து இது அமையும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையேயான இயற்கை எரிவாயு குழாய் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்தில் இருந்து குழாய் மூலம் இயற்கை எரிவாயு தூத்துக்குடிக்கு கொண்டுவரப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் தூத்துக்குடி ஸ்பிக் ஆலை மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், தூத்துக்குடி நகர் பகுதி முழுவதும் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செய்து வருகிறது.
இதேபோல், தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை கொண்டு செல்வதற்கான குழாய் பதிக்கும் பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழ்நிலையில் கொச்சி-கன்னியாகுமரி- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள தொழிற்சாலைகள் அனைத்தும் பர்னஸ் ஆயில் மற்றும் நிலக்கரி போன்ற எரிபொருளில் இருந்து இயற்கை எரிவாயுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கார்பன் வெளியீடு குறைந்து சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறையும். அதுபோல, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை விரைவாக செயல்படுத்தும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இந்த முயற்சியை தூத்துக்குடி தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.