

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று கிரிவலம் வந்த பக்தர்கள்.
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாலையில் 2-வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று கிரிவலம் சென்றனர்.
சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் செல்ல ஏப்.30-ம் தேதி இரவு 9.52 மணி முதல் மே 1-ம் தேதி இரவு 11.08 மணி வரை உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சித்ரா பவுர்ணமி நேற்று முன்தினம் இரவு தொடங்கியதை அடுத்து நேற்று அதிகாலை கோயில் திறக்கப்பட்டு மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, அம்மன் சன்னதி எதிரே உள்ள சித்திர குப்தன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் மற்றும் சித்திர குப்தரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பவுர்ணமியையொட்டி சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோயிலில் பக்தர்களுக்கு தர்பூசணி,வெள்ளரி, தண்ணீர் பாட்டில், நீர்மோர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
தொடர்ந்து, 2-வது நாளாக நேற்றும் கிரிவலம் வந்தனர். கடந்த 2 நாட்களாக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.