

சென்னை: அண்ணாமலை, டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் எதிராக தொடர்ந்த அவதூறு வழக்குகளை திடீரென பரஸ்பரம் வாபஸ் பெற்றுள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவராக பதவி வகித்த அண்ணாமலை ‘டிஎம்கே ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுக முன்னாள் அமைச்சர்கள் பலரின் சொத்து விவரங்களை கடந்த 2023-ம் ஆண்டு வெளியிட்டார்.
அதில் குறிப்பாக, திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு மற்றும் அவரது மகனும் முன்னாள் அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு சொந்தமான 21 நிறுவனங்கள் உள்பட ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்துகள் இருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார். அதையடுத்து அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. விசாரணை யின்போது நேரில் ஆஜரான டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை நடத்தினார். இந்த குறுக்கு விசாரணையின்போது அண்ணாமலையும் தனது மனைவி பெயரில் சொத்துகளை வாங்கி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியதால், அண்ணாமலையும் டி.ஆர்.பாலுவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கும் இதே நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
இந்நிலையில் அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர்.பாலுவும், டி.ஆர்.பாலுவுக்கு எதிராக அண்ணாமலையும் தொடர்ந்திருந்த இரு அவதூறு வழக்குகளையும் இருவரும் பரஸ்பரம் வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், இந்த வழக்குகளின் விசாரணையை தொடர விரும்பவில்லை என்றும் மனுக்களை தாக்கல் செய்தனர். இதை ஏற்ற குற்றவியல் நடுவர் செந்தில்குமார் இருதரப்பு வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டார்.