“கரூர் விவகாரத்தில் சிபிஐ சம்மனால் செந்தில் பாலாஜி பதறுகிறார்” - அண்ணாமலை விமர்சனம்

“கரூர் விவகாரத்தில் சிபிஐ சம்மனால் செந்தில் பாலாஜி பதறுகிறார்” - அண்ணாமலை விமர்சனம்
Updated on
1 min read

கரூர் விவகாரத்தில் மடியில் கனமிருப்பதால் செந்தில்பாலாஜி சிபிஐ விசாரணைக்கு பதறுகிறார் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவத்துக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. புகார் தெரிவித்த உடனேயே, போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமி உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.

திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட்கள் வருத்தத்துடன் உள்ளனர். திமுக கூட்டணிக்குள் சலசலப்புகள் எழுந்துள்ளன. தமிழக அரசியல் களத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ட்விஸ்ட் இருக்கும். இந்த முறையும் அதை எதிர்பார்ப்போம். நாங்கள் எங்களது டைம் லைனில் சரியாக செல்கிறோம். கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டது தவெக. சிபிஐ-யை வைத்து தவெகவை பயமுறுத்துகின்றனர் என்பதை ஏற்க முடியாது.

முதல்வரின் கவனம் சட்டம் ஒழுங்கு, தமிழக நலனில் இல்லை. ரீல்ஸ் போடும் முதல்வராக மாறிவிட்டார். கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு செந்தில் பாலாஜியை அழைத்துள்ளனர். அவரை அழைத்து விசாரிக்க வேண்டியது சிபிஐ கடமை. சிபிஐ செந்தில்பாலாஜியை அழைப்பது சரியானது. அவர் மடியில் கனமிருப்பதால் பதறுகிறார். மடியில் கனம் இல்லை என்றால் சென்று பேச வேண்டியது தானே. சிபிஐ விசாரணைக்கு செந்தில்பாலாஜி ஒத்துழைக்க வேண்டும்.

விஜய் குறித்த என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் வேறு சித்தாந்தம். அவர்கள் வேறு சித்தாந்தம். இருப்பினும் அரசியல் கூட்டணிக்குள் முரண்பாடான கட்சிகள் உண்டு. பொது எதிரியை வீழ்த்த ஒன்று சேர்ந்தது உண்டு. தமிழகத்தில் திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தான் அரசு இயந்திரம் செயலிழந்து, குற்றங்கள் அதிகரித்துள்ளன. திமுக தலைவர்கள் எதையோ சாதித்தது போல், தேர்தலில் வெற்றி பெற்றது போல் உள்ளனர். இது தான் அவர்களின் அழிவுக்கு அஸ்திவாரம். அவர்களின் ஆணவம், அகங்காரத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டங்களுக்கு தான் செல்கிறார். இன்னும் மக்களை சந்திக்கவில்லை. மக்களை சந்திக்க செல்லும் போது, மக்களின் எதிர்ப்பு முதல்வருக்கு தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

“கரூர் விவகாரத்தில் சிபிஐ சம்மனால் செந்தில் பாலாஜி பதறுகிறார்” - அண்ணாமலை விமர்சனம்
“பாஜகவை எதிர்க்க முதுகெலும்புள்ள முதல்வர் வரவேண்டும்” - உதயநிதி பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in