இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி ‘காதுகுத்து விழா’ அழைப்பிதழுடன் பேரவைக்கு வருகை தந்து கவனம் ஈர்த்தனர் அதிமுக உறுப்பினர்கள்.படம்: ம.பிரபு
“பட்ஜெட் அல்ல... காது குத்து விழா” - அழைப்பிதழுடன் வந்த அதிமுக எம்எல்ஏக்கள்
தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரும் தங்களது கைகளில், தமிழக அரசின் பட்ஜெட்டை விமர்சிக்கும் வகையில் ‘மாபெரும் காது குத்து விழா’ என்ற தலைப்புடன் கூடிய அழைப்பிதழ்களை சட்டப்பேரவைக்கு கொண்டு வந்திருந்தனர். தமிழக அரசின் பட்ஜெட்டை நூதனமாக விமர்சிக்கும் விதமாக அதிமுகவினர் கொண்டு வந்த ‘காது குத்து விழா’ அழைப்பிதழ், அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதில், “கடந்த நான்கரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழக மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா, இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கு தலைமை தாங்குபவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். முன்னின்று காது குத்துபவர் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
விழாவில் கூவம் சுத்திகரிப்புக்கு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்துக்கு நிதி, சிங்கார சென்னை திட்டத்துக்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். மேலும் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல்வேறு முறைகளில் ‘மொய்’ வைக்கலாம்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறுகையில், “கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மக்களை வாட்டி வதைத்த ஏமாற்று மாடல் அரசு தனது கடைசி பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்துள்ளது. இந்த அரசு மக்களுக்கு எந்த அளவுக்கு காது குத்துகிறது என்பதை நாட்டு மக்கள் அறியவேண்டும் என்கிற வகையில் ‘காது குத்தும் விழா’ அழைப்பிதழை சட்டப்பேரவையில் அனைவருக்கும் வழங்கினோம்” என்று தெரிவித்தார்.
