

தமிழக அரசின் பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றும், விமர்சித்தும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் தொடங்கி, வேளாண்மையில் அறிவியலைப் பயன்படுத்துவது வரையிலான நம்முடைய முன்னெடுப்புகளால், உழவர் வாழ்வில் உதய சூரியனின் ஒளி பரவுகிறது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: தமிழின தொன்மையை விளக்கும் அருங்காட்சியகங்கள் முதல் நவீன உலகுக்கான செயற்கை நுண்ணறிவு அறிவுசார் பொருளாதார வளர்ச்சி வரை அனைத்திலும் கவனம் செலுத்தி உள்ள திராவிட மாடல் பட்ஜெட்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: வரும் மார்ச் 31, 2027-க்குள் தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ.10,62,248 கோடியாக உயரும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடக்கும் நிலையில், இந்த நிதி எங்கே சென்றது? தமிழகத்தை ஒரு தீராத கடன் படுகுழியில் தள்ளியதே இந்த அரசின் வரலாற்றுச் சாதனை.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: தமிழகத்தின் வளர்ச்சியில் எவரையும் பின்தங்கி விட அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதை செயல்படுத்தும் வகையில் இடைக்கால நிதி நிலை அறிக்கை வரவேற்கத்தக்கதாக இருப்பது பாராட்டத்தக்கது.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 3 சதவீதமாக கட்டுப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. மத்திய அரசின் கொள்கைகளால் வேளாண் துறை பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் வேளையில், தமிழக விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது இந்த பட்ஜெட்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பெண்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான நேரடி நிதி உதவித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. கடும் நிதிச் சுமைகளுக்கு இடையே சாமானிய மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் இந்த அறிக்கையை மாநில அரசு வழங்கியுள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: இது தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அல்ல. வெற்றுப் பெருமை பத்திரம். ஐந்தாண்டுகளாக ஏமாற்றத்துக்குப் பழகிய மக்களுக்கு இந்த ஏமாற்றமும் புதிதில்லை. மாற்றமும் தொலைவிலில்லை.
பாமக தலைவர் அன்புமணி: தமிழ்நாட்டை கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக அரசு, தமிழ்நாட்டை எந்த அளவுக்கு கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது என்பதற்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை தான் சான்று. தமிழகத்திலுள்ள ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.27 லட்சமும், 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பெயரில் ரூ.5.08 லட்சமும் கடன் சுமையை மு.க.ஸ்டாலின் அரசு சுமத்தியிருக்கிறது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகாலப் போராட்டக் கோரிக்கைகள் குறித்து எந்தவொரு ஆக்கப்பூர்வமான அறிவிப்பும் இல்லாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்கவோ, டாஸ்மாக் கடைகளை மூடி மது அரக்கனிடமிருந்து மக்களைக் காக்கவோ இந்த பட்ஜெட்டில் துணிச்சலான திட்டங்கள் இல்லை.
இதேபோல், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள், தன்னார்வலர்கள் தமிழக அரசின் பட்ஜெட்டை பாராட்டியும், விமர்சித்தும் உள்ளனர்.