Last Updated : 20 Oct, 2017 12:53 PM

 

Published : 20 Oct 2017 12:53 PM
Last Updated : 20 Oct 2017 12:53 PM

நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில் நெல்லையில் விதிமீறி அழிக்கப்படும் குளங்கள்: தடுக்க வேண்டிய அரசும் துணைபோவதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை

திருநெல்வேலி மாநகரில் தனியாரால் மட்டுமின்றி அரசாலும் குளங்கள் பலவும் நிரப்பப்பட்டு கட்டுமானங்கள் தோன்றியுள்ளன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட பின்னரும் நீர்நிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காததால் பல குளங்கள் அழியும் தருவாயில் இருப்பதை இயற்கை ஆர்வலர்கள் வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2,518 குளங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான குளங்கள் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வருகின்றன. பல குளங்கள் அமைந்திருந்த இடங்கள் கட்டிடங்களாக மாறிவிட்டன. திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் பல குளங்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.

பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பகுதியிலிருந்த ஓச்சாகுளம், பூவரசன் குளம், குளநீர்பிடி குளம் ஆகியவை அன்பு நகராக மாறியிருக்கிறது. பெருமாள்புரம் பகுதியில் உள்ள முள்ளிகுளம் மண்டல போக்குவரத்து அலுவலர் அலுவலகமாக மாற்றப்பட்டுவிட்டது. வேய்ந்தான்குளத்தின் பெரும்பகுதியை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையமாக மாற்றியுள்ளது. அங்கு ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளும் கட்டப்பட்டிருக்கின்றன.

குளத்தில் செயல்படுகின்றன

பாளையங்கோட்டை புனைஇலந்தைகுளம் பகுதியில் 135 பேருக்கு வீட்டுமனை பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தில்தான் தாட்கோ அலுவலகம், வருமான வரித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு அலுவலகங்கள் கட்டப்பட்டு செயல்படுகின்றன. அண்ணாநகர் பகுதி முன்பு பொன்னின்றான் குளமாக இருந்தது.

பாளையங்கோட்டை சிவன்கோயில் தெப்பக்குளம் ஆக்கிரமிக்கப்பட்டு குடிசைகள் தோன்றியிருக்கின்றன. நரி இலந்தைகுளம் இருந்த இடத்தில்தான் அரசு உதவிபெறும் கல்லூரி உள்ளது. அப்பகுதியை சுற்றிலும் கட்டிடங்களும் உருவாகியிருக்கின்றன.

திருநெல்வேலி மாநகர பகுதியில் சுவாமி நெல்லையப்பர் குளம், கிருஷ்ணபேரி குளம், நெடுங்குளம், பாம்பன்குளம், வேட்டைக் கருங்குளம், வாகைகுளம், செட்டிக்குளம், ஆனையார்குளம், பெரியகுளம், நயினார்குளம், புளியங்குளம், பொட்டை குளம், இலந்தான்குளம், புதுக்குளம், மூளிகுளம் உள்ளிட்ட 29 குளங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருநெல்வேலி நகரின் பெரிய குளமான நயினார்குளத்தின் கரைப்பகுதி கடைகளாலும், தொழில் நிறுவனங்களாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. லாரிகள், கார் ஷெட்டுகள் இதன் கரைகளில் அமைந்திருக்கின்றன. இவற்றிலிருந்து கழிவுகள் தினமும் குளத்தில் சேர்கிறது.

குடிநீர் குளமும் தப்பவில்லை

பாளையங்கோட்டையின் வடக்கு பகுதியில் பாளையங்கால்வாயை ஒட்டி அமைந்துள்ளது மூளிக்குளம். 10.56 ஏக்கர் பரப்புள்ள இந்த குளம் குடிநீரை சேமிக்க உருவாக்கப்பட்டிருந்த குளமாகும். இக்குளத்தின் 4 புறமும் சுவர்கள் கட்டப்பட்டு தெப்பம்போல் காட்சியளிக்கிறது.

பாளையங்கோட்டை நகருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டம் வருவதற்குமுன் இந்த குளம்தான் குடிநீர் அளித்து வந்தது.

பாளையங்கால்வாயிலிருந்து தாமிரபரணி ஆற்று நீர் இக்குளத்துக்கு வரும் வகையில் கால்வாய்கள் இருந்தன. குளத்தில் சேகரமான தண்ணீரையே இப்பகுதி மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், இப்போது குளிக்கக் கூட பயன்படுத்த முடியாத அளவுக்கு தண்ணீர் மாசுபட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த குளம் பராமரிக்கப்படுவதில்லை. அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த குளத்தில்தான் கலக்கிறது. ஆகாய தாமாரைகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன.

தண்ணீர் மாசுபட்டதால் மீன்களும் அழிந்து விட்டன. கொசு உற்பத்தி நிலையமாக இந்த குளம் உருமாறி விட்டது. இதை தூர்வாரி நீர் நிரப்பினால் அருகிலுள்ள குடியிருப்புகளில் நிலத்தடி நீர் பெருக வாய்ப்புள்ளது. குளத்தில் மீன் வளர்ப்பு முறையையும் மேற்கொள்ளலாம். நீச்சலை மறந்துவிட்ட இளைய தலைமுறைக்கு நீச்சல் கற்கவும் இந்த குளம் உதவியாக இருக்கும் என்று இப்பகுதியிலுள்ள மூத்த குடிமக்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.

திருநெல்வேலி மாநகரில் ஏற்கெனவே பல பெரிய குளங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், அழிந்து கொண்டிருக்கும் குளங்களையாவது பாதுகாக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

சட்டம் இருந்தும் செயல்படுத்தவில்லை

இது தொடர்பாக சமூக ஆர்வலரும், ஓய்வுபெற்ற வட்டாட்சியருமான எஸ். முத்துசாமி கூறியதாவது:

கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை தடுத்தல், ஆக்கிரமித்த பகுதிகளில் இருப்பவர்களை வெளியேற்றி ஆக்கிரமிப்பை அகற்றுதல், கண்மாய்களை பாதுகாத்தல் ஆகியவை 23.5.2007-ல் வெளியிடப்பட்ட தமிழ்நாடு கண்மாய் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் சட்டம் 2007-ன் முக்கிய நோக்கங்களாகும்.

இச்சட்டம் தமிழ்நாடு முழுவதும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கண்மாய்களுக்கும் பொருந்தும். இச் சட்டத்தின்படி கண்மாய் நீர்பரப்பு, கண்மாய் வரத்து கால்வாய், கரையில் உள்ள கட்டமைப்புகள், மடை, மறுகால், போக்கு கால்வாய், பாசன வாய்க்கால், இதன் கட்டுமானங்கள், வடிகால்கள், இதர கண்மாய் புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தினாலோ, ஆக்கிரமிப்பு செய்தாலோ காவல்துறைக்கு பொதுப்பணித்துறை தெரிவித்து, உடனடி நடவடிக்கை எடுக்க முடியும்.

கண்மாய் நிலங்களில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்தாலோ அல்லது கண்மாய் மற்றும் அதை சார்ந்த பகுதிகளை சேதப்படுத்தினாலோ இச்சட்டத்தின் 7 மற்றும் 8-வது பிரிவின்படி 3 மாத சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கலாம். இச்சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தினால் குளங்கள், கண்மாய்களை ஆக்கிரமிப்பதை தடுக்க முடியும்.

ஆறுகள், குளங்கள், கால்வாய்கள், நீராதாரங்களை பாதுகாக்கும் கடமையை பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம், வருவாய்த்துறை, கனிமவளத்துறைக்கு கட்டாயமாக்க வேண்டும். கடமையை நிறைவேற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தண்டிக்கும் வகையிலும் சட்டம் இயற்ற வேண்டும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x