Published : 30 May 2023 07:42 AM
Last Updated : 30 May 2023 07:42 AM

அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி, ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4-வது நாளாக சோதனை

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி, ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4-வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் மற்றும் டாஸ்மாக், மின்துறை ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 26-ம் தேதி காலை முதல் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 4-வது நாளான நேற்று கரூர், சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 25 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சரின் தம்பி வீடு, அலுவலகம், கரூர் காந்திநகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் வீடு, கரூர் வடக்கு காந்திகிராமம் முல்லைநகரில் உள்ள அவரது அக்கவுண்டன்ட் ஷோபனா பிரேம்குமாரின் வீடு ஆகிய இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஷோபனாவை அவரது வீட்டில் இருந்து அவர்களது காரில் வெளியே அழைத்து சென்றனர். 1 மணி நேரத்துக்கு பிறகு அவரை அழைத்து வந்து அவரது வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளனர்.

கரூர் 80 அடி சாலையில் உள்ள எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த்தின் அலுவலகத்தில் சோதனையிட 5 வாகனங்களில் 25-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அப்போது, அலுவலகம் பூட்டியிருந்ததால் அதிகாரிகள் தங்களின் வருகை குறித்து தகவல் அளித்துவிட்டு, காத்திருந்தனர். ஆனாலும், யாரும் கதவை திறக்காததால் போலீஸார் மற்றும் வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் அலுவலக பூட்டை வருமான வரித்துறை அதிகாரிகள் உடைத்துவிட்டு, கதவைத் திறந்து அலுவலகத்தின் உள்ளே சென்று சோதனை நடத்தினர்.

கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள சுரேந்தர் மெஸ், அதன் மாடியில் உள்ள நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள், உள்ளூர் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். கோவை மாவட்டத்தில் நேற்று கோல்டுவின்ஸ் பகுதியில் திமுகவைச் சேர்ந்த செந்தில் கார்த்திகேயன் வீடு மற்றும் பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் நண்பரான அரவிந்தன் என்பவருக்கு சொந்தமான இடங்கள் தவிர மேலும் 3 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். வருமானவரித்துறை சோதனை விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் கோவையில் இன்றும் சோதனை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை இயக்கும் ஒப்பந்ததாரரான, ஈரோட்டைச் சேர்ந்த சச்சிதானந்தத்தின் வீட்டில் 4-வது நாளாக நேற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று காலை 11 மணியளவில் 3 வருமானவரித்துறை அதிகாரிகள், சச்சிதானந்தத்தை வாகனத்தில் வெளியில் அழைத்துச் சென்றனர். ஈரோட்டில் அவர் கணக்கு வைத்துள்ள வங்கி லாக்கரில் சோதனை மேற்கொள்வதற்காக, அவரை வருமானவரித்துறையினர் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவரிடம் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை, கரூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் சோதனை நிறைவு பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள பகுதிகளில் நடைபெறும் சோதனைகளும் விரைவில் முடிந்து, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திமுகவினர் தலைமறைவு: கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டுக்கு வருமான வரித் துறையினர் சோதனையிட சென்றபோது, வருமான வரித்துறையினரை தாக்கி, காரை சேதப்படுத்தியது, பணி செய்யவிடாமல் தடுத்ததாக 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், நேற்று முன்தினம் இரவு போலீஸார் கைது நடவடிக்கைக்காக சென்றபோது, திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் தலைமறைவாகிவிட்டனர். ஆனாலும், கைது நடவடிக்கை தொடரும் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x