Published : 27 May 2023 10:41 AM
Last Updated : 27 May 2023 10:41 AM

ஜப்பானில் கோமாட்சு நிறுவனத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு 

ஜப்பானில் முதல்வர் ஸ்டாலின்

ஒசாகா: ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அந்நிறுவன உயர் அலுவலர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், மே 23 அன்று சிங்கப்பூர் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது இரண்டு நாள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு மே 25 அன்று இரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணம் சென்றார்.

நேற்று காலை ஒசாகாவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பான ஜெட்ரோவுடன் (Japan External Trade Organization – JETRO) இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்து உரையாற்றினார்.

பின்னர், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் பார்வையிட்டார். பின்னர் அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களான டகாயுகி புரோகுஷி மற்றும் கோ கமாடா ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்போது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு கோமாட்சு நிறுவன உயர் அலுவலர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திட வேண்டும் என்றும் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு அந்நிறுவனத்தினர் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

கோமாட்சு நிறுவனம் உலகளவில் தொழில்துறை இயந்திரங்கள், வாகன தளவாடங்கள், மின்னணுவியல் போன்ற பிற வணிகங்களிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாட்டில் கோமாட்சு இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் டம்ப் டிரக், சுரங்க உபகரணங்கள், ஹைட்ராலிக் அகழ்வாராய்வு இயந்திரம் போன்றவற்றை தயாரித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x