Published : 23 May 2023 10:51 PM
Last Updated : 23 May 2023 10:51 PM

தமிழக ரேஷன் கடைகளில் விற்க போதுமான கருப்பட்டி உற்பத்தி இல்லை: பனைத் தொழிலாளர்கள் நல வாரியம் தகவல்

தருமபுரியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தின்போது புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் வழங்கப்பட்டது

தருமபுரி: தமிழக ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் அளவுக்கு கருப்பட்டி உற்பத்தி இல்லை என பனைத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் துறை துணை ஆணையர்கள், அதிகாரிகள், பனைத் தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோருடன் தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் ஆய்வுக் கூட்டம் தருமபுரி சுற்றுலா மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

இந்த கூட்டத்துக்கு, தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமை வகித்தார். 3 மாவட்ட பனைத் தொழிலாளர்களின் நலன், முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில், பனை மரத் தொழிலாளர்களுக்கு வாரிய உறுப்பினர் விண்ணப்பப் படிவங்களை அவர் வழங்கினார்

தொடர்ந்து, எர்ணாவூர் நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியது: "தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் பனை மரத் தொழிலாளர்களுக்கான நலவாரியம் முடங்கிக் கிடந்தது. கடந்த ஓராண்டாகத் தான் வாரியம் புத்துயிர் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வாரியத் தலைவராக நான் பொறுப்பேற்றபோது தமிழகத்தில் 9,000 பனைத் தொழிலாளர்கள் மட்டுமே நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். கடந்த ஓராண்டில் 20 ஆயிரம் புதிய உறுப்பினர்களை வாரியத்தில் சேர்த்துள்ளோம்.

தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு வாரியம் மூலம் ரூ.49 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பினராக இருந்து நலிவடைந்த பனைத் தொழிலாளர்களுக்கு அரசிடம் இருந்து நிவாரணம் பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

பனைத் தொழிலாளர்களுக்கு பதநீர் இறக்க, கருப்பட்டி தயாரிக்க, நுங்கு வெட்டி விற்க உரிமையும், அதிகாரமும் உள்ளது. ஆனால், கள் விற்பனை என்பது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்பதால் வாரியம் அதில் தலையிட முடியாது. பனை மரங்களை வெட்டக் கூடாது என தமிழக சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பனை மரங்களை வெட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றுத்தான் வெட்ட வேண்டும். இந்த தடை தொடர்பான அறிவிப்பு விரைவில் அரசாணையாக வெளியிடப்பட உள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். ஆனால், அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் போதிய கருப்பட்டி உற்பத்தி இல்லை. பதநீர் உள்ளிட்ட பனை பொருட்களை தனியாக ஸ்டால்கள் அமைத்து விற்பனை செய்யும் திட்டம் முதல்வர் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எதிர்காலத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x