Published : 23 May 2023 06:05 AM
Last Updated : 23 May 2023 06:05 AM

கிருஷ்ணகிரி அரசு மருத்துவர்களின் 40 நாள் தொடர் சிகிச்சையில் 730 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை நலம்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை 40 நாள்கள் தொடர் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்த நிலையில் பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்த மருத்துவக் குழுவினர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் குறைப்பிரசவத்தில், 730 கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தைக்கு மருத்துவக் குழு மூலம் 40 நாள்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. நலமடைந்த குழந்தையை நேற்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ராயக்கோட்டை அருகே பாஞ்சாலி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல்(28). இவரது மனைவி முத்து மீனாட்சி(19). கர்ப்பிணியாக இருந்த இவருக்கு ஏப்.12-ம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் குறைப்பிரசவத்தில் (கர்ப்பமான 28-வது வாரத்தில்) ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 730 கிராம் இருந்தது.

இதையடுத்து, குழந்தை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி உத்தரவின்பேரில், மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகர், மகப்பேறு தலைமை மருத்துவர் கவிதா, மருத்துவர்கள் மது, செல்வி, பழனி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

விலை உயர்ந்த மருந்து: மேலும், மூச்சுத் திணறல், நுரையீரல் வளர்ச்சி குறைவால் அவதியுற்ற குழந்தைக்கு ‘சர்பாக்டான்ட்’ என்ற விலை உயர்ந்த சிறப்பு மருந்துடன், சுவாசக் கருவி உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

40 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நேற்று சுவாசக் கருவியின்றி சுவாசிக்க தொடங்கியதோடு, தாய்ப்பாலும் குடிக்கத் தொடங்கியது. எடை 1 கிலோவாக அதிகரித்தது. குழந்தையின் விழித்திரை, செவி, மூளைக்குச் செல்லும் நரம்புகள் பரிசோதனை செய்யப்பட்டு அனைத்தும் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பெற்றோரிடம் குழந்தையை மருத்துவக் குழுவினர் நேற்று ஒப்படைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x