Published : 23 May 2023 05:54 AM
Last Updated : 23 May 2023 05:54 AM

பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது - வங்கி ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

சென்னை: அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 29-வது தேசிய மாநாடு மும்பையில் அண்மையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 29-வது தேசிய மாநாடு கடந்த 13 முதல் 15-ம் தேதிவரை நடந்தது. இதில், நாடு முழுவதும் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பொதுத்துறை வங்கிகளைப் பலப்படுத்த என வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, வங்கிச் சேவை இல்லாத பகுதிகளில் வங்கிக் கிளைகளைத் திறக்க வேண்டும். முன்னுரிமை துறைகளான விவசாயம், வேலைவாய்ப்பை பெருக்கும் துறைகள், சுகாதாரம், கல்வி, ஊரக மேம்பாடு,பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் துறை உள்ளிட்டவற்றுக்கு அதிக கடனுதவி வழங்கவேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளில் 30 தனியார் வங்கிகள் மோசமான நிர்வாகம் காரணமாக திவால் ஆகின. எனவே, பொதுத் துறை வங்கிகளைப் பலப்படுத்துவதோடு, அவற்றை தனியார்மயமாக்கக் கூடாது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் பலஆயிரம் கோடி கடனை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளன. அவற்றை வசூலிக்க வேண்டும்.

ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக, அதானி குழுமத்தின் மீதுசந்தேகங்கள் நிலவுவதால் அந்தக் குழும நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன்களை திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறை வங்கிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x