Last Updated : 22 May, 2023 11:07 AM

 

Published : 22 May 2023 11:07 AM
Last Updated : 22 May 2023 11:07 AM

தஞ்சையில் ‘சட்டவிரோத’ மது அருந்திய 2 பேர் உயிரிழப்பு: இருவர் கைது; டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை அருந்திய 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் கீழவாசல் படைவெட்டி அம்மன் கோயில் தெருவைசேர்ந்தவர் குப்புசாமி(68). மீன் வியாபாரி. இவர் நேற்று காலை 11 மணியளவில் மீன் மார்க்கெட் எதிரில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றார். ஆனால், மதியம் 12 மணிக்குதான் மதுக்கடை திறக்கும் என்பதால், அதன் அருகில் செயல்படும் பாருக்குச் சென்று அங்கு சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை வாங்கி அருந்திவிட்டு, மீன் மார்க்கெட்டுக்கு வியாபாரம் செய்யச் சென்றார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் திடீரென வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்தார். அவரது மனைவி காஞ்சனா தேவி மற்றும் உடன் இருந்தவர்கள் அவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதனிடையே, தஞ்சாவூர் பூமான் ராவுத்தன் கோயில் தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநரான குட்டி விவேக் (36) என்பவரும், அதே பாருக்குச் சென்று மது அருந்திவிட்டு வெளியே வந்தார். அப்போது, அவரும் திடீரென மயங்கி விழுந்தார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்கள் அருந்திய மதுபானத்தில் சயனைடு கலந்திருந்தது தெரியவந்துள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கூறினார். இது தொடர்பாக அவர் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறும்போது, “மதுபான மாதிரியை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியதில், அதில் சயனைடு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பார் உரிமையாளரான காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் பழனிவேல் மற்றும் பார் ஊழியர் காமராஜ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாரில் சட்டவிரோதாமாக மது விற்பனை செய்த விவகாரத்தை உரிய முறையில் தெரியப்படுத்தவில்லை எனக் கூறி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சௌந்தர பாண்டியன், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மேலாளர் முருகானந்தம், பணியாளர்கள் திருநாவுக்கரசு, சத்தியசீலன்,பாலு உள்ளிட்ட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சைனைடு கலந்த மது அருந்தியவர்களுக்கு சயனைடு எப்படி கிடைத்தது? இருவரையும் கொலை செய்யும் நோக்கில் வேறு யாரும் மதுவில் சைனைட் கலந்து கொடுத்தார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார் விசாரணையை தொடர்ந்துள்ளனர்.

இதனிடையே, இறந்தவர்களின் உறவினர்கள்,அரசு சார்பில் நிவாரணம் வழங்கினால் மட்டுமே இருவரின் உடல்களையும் வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x