Published : 22 May 2023 04:41 AM
Last Updated : 22 May 2023 04:41 AM

ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் விற்பனை செய்ய திட்டம்

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம் தினமும் 28 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 220-க்கும் மேற்பட்ட பால் உப பொருட்களும் தயாரித்து, விற்கப்படுகின்றன. இவற்றில், மோர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், நெய், இனிப்பு வகைகள் ஆகியவை அதிக அளவில் விற்பனையாகின்றன.

இந்நிலையில், ஆவின் சார்பில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் என்று அப்போதைய பால்வளத் துறை அமைச்சர் நாசர் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். பின்னர் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து, பேட்டரி வாகனம் மூலம் ஐஸ்கிரீம் வகைகள் விற்கப்பட்டன. வைட்டமின்-டி சத்து நிறைந்த பால் பாக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, பால்வளத் துறை அமைச்சராக மனோ தங்கராஜ் சமீபத்தில் பொறுப்பேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘ஆவின் சார்பில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்’’ என்றார்.

இந்நிலையில், ஆவின் நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. தினமும் ஒருலட்சம் தண்ணீர் பாட்டில்களை விற்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் ஆவின் குடிநீர் பாட்டில்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு, ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. ஆவினின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் குடிநீர் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரையிலான குடிநீர் பாட்டில்களை தயாரித்து விற்க திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்கள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, குடிநீர் தயாரிப்பு ஆலையுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக, ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கோரும் குடிநீர் ஆலை, அனைத்து சட்டப்பூர்வ உரிமங்களுடன், அரசின் வழிகாட்டுதல், நடைமுறைகளின்படி செயல்படவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த செயல்முறை இணையவழியில் நடக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக அரசு சார்பில் 2013-ல்அம்மா குடிநீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒரு லிட்டர் ரூ.10-க்குவிற்கப்பட்டது. 2020 மார்ச் மாதத்தில் அம்மா குடிநீர் திட்டம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x