Last Updated : 21 May, 2023 05:24 PM

 

Published : 21 May 2023 05:24 PM
Last Updated : 21 May 2023 05:24 PM

திமுக ஆட்சி விரைவில் மக்கள் செல்வாக்கை இழக்கும்: அதிமுக எம்.பி தம்பிதுரை கருத்து

நாகரசம்பட்டியில் புதிய நிழல் கூடம் அமைக்க பணியை பூமி பூஜை செய்து தம்பிதுரை எம்.பி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி: திமுக ஆட்சி விரைவில் மக்கள் செல்வாக்கை இழக்கும் என்று நாகரசம்பட்டியில் தம்பிதுரை எம்.பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டியில், பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வந்த தம்பிதுரை எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''நான் கட்சி சார்பில் சொல்லவில்லை. நானும் ஒரு சாதாரண பொதுமக்களில் ஒருவராக இருந்து சொல்கிறேன், 2000 ரூபாய் நோட்டுக்கள் எங்கே இருக்கிறது. எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இப்போது போய் கடையில் கேளுங்கள். 2000 ரூபாய் நோட்டை காண்பிக்கச் சொல்லுங்கள். வங்கியில் கூட இல்லை. 2000 ரூபாய் நோட்டை பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டன. எங்கே வந்தது, எங்கே சென்றது என்றே தெரியவில்லை.

அது கருப்பு பணமாககூட எங்காவது இருந்து கொண்டிருக்கலாம். அதனால் பிரதமர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருப்பவர் தமிழகத்தில் இருந்தவர்தான். அவர் ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்றால் நம்முடைய பொருளாதாரத்தில் ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். 2000 ரூபாய் நோட்டு அதிக புழக்கத்தில் இல்லாததால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. கட்சியின் கருத்து அல்ல.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்., வெற்றி பெற்றது. அடுத்து வந்த எம்.பி., தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறை காங்., வெற்றி பெற்றுள்ளது. இதை வைத்து வரும் எம்.பி., தேர்தலில் காங்., வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது. தமிழகத்தைத் பொறுத்தவரை பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்திய அளவில் பிரதமர் வேட்பாளர் என்று சொன்னால் அது நரேந்திர மோடிதான். தமிழகத்தைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க., தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று பிரதமர் சொல்லியிருக்கிறார். என்னுடன் பணியாற்றியவர் ஒருவர் அமைச்சராக இருக்கிறார். அவர் எங்கு சென்றாலும் அந்த கட்சியை ஒழித்துவிடுவார். ஆட்சியும் காலியாகிவிடும். அவர் வந்தபிறகு சாராயம் எங்கும் ஓடுகிறது. மின்வெட்டு ஆரம்பித்துவிட்டது.

ஆற்காடு வீராசாமி சொல்லுவார், என்னால்தான் திமுக ஆட்சி காணாமல் போய்விடும் என்று. அது போல, இந்த தி.மு.க., ஆட்சி விரைவில் மக்கள் செல்வாக்கை இழக்கும். வருங்காலத்தில் வெற்றி பெறாமல் போவதற்கு மின்சாரத்துறையில் நடந்த ஊழலும், சாராயத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பும் ஆகும். கரூரில் இருக்கும் அனைவரையும் தமிழகம் முழுவதும் அனுப்பி வைத்து வசூல் செய்து கொண்டிருக்கிறார். மதுவின் விலையை அரசு ஏற்றியதன் காரணமாக மக்கள் கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழக்கும் அவல நிலை உருவாவதற்கு காரணம் இந்த தி.மு.க., ஆட்சி. அதில் பங்கேற்றுள்ள அமைச்சர். எனவே அந்த அமைச்சரை என்று தி.மு.க., நீக்குகிறதோ அன்றுதான் இந்த சாராயப் பிரச்னை ஒழியும்.

ஈரோடு இடைத்தேர்தலில் பழனிசாமிக்கு, தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் கொடுத்தது. அதே போல் கர்நாடகாவில் போட்டியிடும் போது தேர்தல் ஆணையம் பழனிசாமி தலைமையிலான கூட்டணியைத்தான் ஏற்றுக் கொண்டது. ஒன்றரை கோடி தொண்டர்களும், தமிழக மக்களும் அவரைத்தான் ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர் செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது. தி.மு.க.,வை பொறுத்தவரை விடியல் முடிந்துவிட்டு. தற்போது அஷ்டமத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. தெரியாமல் சூரியனுக்கு ஓட்டுப் போட்டுவிட்டோம். அடுத்து இரட்டை இலைக்குத்தான் ஓட்டளிப்போம் என்று மக்கள் பேசிக் கொள்கின்றனர். அது நிச்சயம் நடக்கும்.'' இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x