Published : 21 May 2023 04:40 PM
Last Updated : 21 May 2023 04:40 PM

இன்னும் 4 லட்சம் கோடிக்கான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவேண்டும்: கே.எஸ்.அழகிரி

ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினர்

ஸ்ரீபெரும்புதூர்: "7 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்த 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. அதில், 3 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள்தான் திரும்ப வந்துள்ளன. இன்னும் 4 லட்சம் கோடி ரூபாய் 2000 நோட்டுகள் திரும்ப வரவேண்டும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனையொட்டி மருத்துவ முகாமினை துவக்கி வைத்து, நினைவிடத்தில் தேசபக்தி பாடல்களை இசைக்குழுவினர் பாடினர். அதைத்தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மத்திய அரசின் 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்ப பெறும் நடவடிக்கை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு எதற்காக திரும்பப் பெற்றது? மொத்தம் 7 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்த 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. இன்றைக்கு 3 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள்தான் திரும்பவந்துள்ளன.

இன்னும் 4 லட்சம் கோடி ரூபாய் 2000 நோட்டுகள் திரும்ப வரவேண்டும். அவ்வளவு தொகை பொதுமக்களிடம் இருப்பதாக தெரியவில்லை. அப்படியென்றால் இந்த குழப்பத்துக்கு என்ன காரணம்? ஏன் இந்த தவறை பிரதமர் செய்கிறார்? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பாஜக பதில் சொல்ல வேண்டும்" என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x