Published : 18 May 2023 09:23 PM
Last Updated : 18 May 2023 09:23 PM

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி போராட்டம்

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை பெற மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசி அருகே ஊராம்பட்டியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆடையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் மம்சாபுரத்தை சேர்ந்த குமரேசன் (33), பள்ளபட்டியை சேர்ந்த சுந்தர்ராஜ் (27), ரிசர்வ் லைன் சிவன் காலனியை சேர்ந்த அய்யம்மாள் (70) ஆகியோர் உயிரிழந்தனர். கருப்பாயி (45) காயமடைந்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.

இந்நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பின் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது உடல்களை வாங்க மறுத்த உறவினர்கள், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கிய அரசு, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் மட்டுமே நிவாரணம் அறிவித்துள்ளது. இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சிவகாசி ஆர்.டி.ஓ விஸ்வநாதன், ஏ.டி.எஸ்.பி சூரியமூர்த்தி, டி.எஸ்.பி தனஞ்செயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பட்டாசு ஆலை உரிமையாளர் தரப்பில் இருந்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சத்திற்கான கசோலையும், இறுதிச் சடங்கிற்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தால், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து 2 மணி நேரத்திற்கு பின் போராட்டத்தை கைவிட்டு, இறந்தவர்களின் உடல்களை பெற்றுக்கொண்டு சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x