

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம் என்றாலும் கூட விளையாட்டின்போது நேரும் துன்புறுத்தல்களைத் தவிர்க்க உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
‘ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்’: ஜல்லிக்கட்டு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது.
தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்." என்று கூறியுள்ளார்.
இதனிடையே, ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு தீர்ப்பு: கட்சித் தலைவர்கள் வரவேற்பு: “அதிமுக அரசின் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மூலமாக இன்றைக்கு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் உறுதி செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“இந்தத் தருணத்தில், 2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு சட்டமுன்வடிவினை முதல்வர் என்ற முறையில் முன்மொழியும் வாய்ப்பினை வழங்கிய ஜெயலலிதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தீர்ப்பு தமிழகத்தின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி. இதனை நான் தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
“உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க வரவேற்கத்தக்க தீர்ப்பு ஆகும். இதன் மூலம் தமிழகத்தின் பண்பாட்டு மரபு நிலைநாட்டப்பட்டு இருக்கிறது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
“ஜல்லிக்கட்டு போட்டிகளின் அனுமதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் பிரதமர் மோடி மட்டும் தான்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராய மரண வழக்குகள்: சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் நியமனம்: கள்ளச்சாராய மரண வழக்குகளுக்கான சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, எக்கியார்குப்பம் வழக்கிற்கு ஏடிஎஸ்பி கோமதி, செங்கல்பட்டு வழக்கிற்கு ஏடிஎஸ்பி மகேஸ்வரி ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் தங்களின் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
‘கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி எதுவும் அமைக்கப்படவில்லை’: கொள்ளிடம் ஆற்றில் 25 இடத்தில் மணல் குவாரிகள் அமைக்க, அரசு எடுக்கும் முயற்சியை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இம்மனு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் பாரம்பரியமான கல்லணை சேதம் அடைய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர். அரசு தரப்பில், “கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி எதுவும் அமைக்கப்படவில்லை; கொள்ளிடம் ஆற்றினை சுத்தம் செய்து 25 இடங்களில் குடிநீர் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கை ஆரம்ப நிலையிலேயே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு: சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
‘விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் குமரேசன், சுந்தர்ராஜ் மற்றும் அய்யம்மாள் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருளாயி என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் இருளாயிக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’ என்று அவர் கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வர் ஆகிறார் சித்தராமையா; டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி: கடந்த ஐந்து நாட்களாக நீடித்து வந்த கர்நாடக முதல்வர் யார் என்ற இழுபறிக்கு வியாழக்கிழமை முடிவு எட்டப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் கூறுகையில், "சித்தராமையா கர்நாடகாவின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். டிகே சிவக்குமார் ஒரே துணை முதல்வராக இருப்பார், மேலும், மக்களவைத் தேர்தல் முடியும் வரை சிவகுமார் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராக தொடர்வார். முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மே 20 ம் தேதி பதவி ஏற்றுக்கொள்வார்கள். ஒரே கருத்துள்ள கட்சிகளை இந்தப் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து, முதல்வர் போட்டியில் தீவிரமாக நின்றவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டிருப்பது குறித்து டி.கே.சிவகுமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "மக்கள் இவ்வளவு பெரிய ஆணையை வழங்கியிருக்கும்போது அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதுதான் எங்களின் நோக்கமும் குறிக்கோளும். நான் எதற்காக வருத்தப்பட வேண்டும்? இன்னும் நீண்ட தூரம் போகவேண்டியுள்ளது. எல்லாம் நன்றாக இருக்கிறது. எல்லாம் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
மத்திய சட்ட அமைச்சர் பதவியிலிருந்து கிரண் ரிஜிஜு நீக்கம்: மத்திய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்ககு அர்ஜுன் ராம் மேக்வாலை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய இணையமைச்சராக இருக்கும் அர்ஜுன் மேக்வால், தற்போது பார்த்துவரும் இலாக்காக்களுடன், சட்டம் மற்றும் நீதித்துறையின் அமைச்சராக செயல்படுவார். மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு, புவி அறிவியியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரண் ரிஜிஜு, நீதிபதிகளை நியமிக்க தற்போது நடைமுறையில் உள்ள கொலிஜீயம் முறைக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அதே நேரத்தில், ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சிலர் தேசவிரோத குழுக்களின் பகுதியாக இருப்பதாக கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கிரண் ரிஜிஜுவிடம் இருந்து சட்ட அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து, அது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி மாணிக் தாக்கூர், "கிரண் ரிஜிஜு ஒரு தோல்வி அடைந்த சட்ட அமைச்சர். அவரால் புவி அறிவியல் துறையில் என்ன செய்ய முடியும்? புதிய சட்ட அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அர்ஜூன் ராம் மேக்வால், முதிர்ந்த அணுகுமுறை கொண்டவராக இருப்பார் என நம்புவோம்" என்று தெரிவித்துள்ளார்.
‘தி கேரளா ஸ்டோரி’யை தடை செய்யக் கூடாது: உச்ச நீதிமன்றம்: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு மேற்கு வங்க மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் இந்த திரைப்படத்தை நேரடியாகவோ, மறைமுகவோ தடை செய்யக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.
மும்பை தாக்குதல் தீவிரவாதியை நாடு கடத்த அமெரிக்கா இசைவு: உலகையே உலுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் இசைவு தெரிவித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் இந்த இசைவினைத் தெரிவித்துள்ளது. நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியான் கூறுகையில், "62 வயதான ராணாவை நாடு கடத்த இந்தியா கோரியுள்ள காரணங்களில் முகாந்தரம் உள்ளதால் அவரை நாடு கடத்த சம்மதிக்கிறோம்" என்றார்.